

புதுடெல்லி: யூபிஎஸ்சி மெயின் தேர்வு 2021 திட்டமிட்டபடி ஜனவரி 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா பெருந்தொற்றுப் பரவல் நிலையை மிகக் கவனமாக ஆய்வு செய்தப் பின்னர், மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), ஏற்கெனவே திட்டமிட்டபடி 2022 ஜனவரி 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் குடிமைப் பணிகள், (பிரதான) தேர்வு 2021 நடத்துவது என முடிவு செய்துள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்: தொற்றுப் பரவலை தடுக்க அரசாங்கங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை கருத்தில் கொண்டு, தேர்வர்களுக்கு எந்தவித வசதிக்குறைவும் ஏற்படாமல் உறுதி செய்யுமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
தேர்வு நடைபெறும் நாட்களுக்கு முதல் நாளிலிருந்து தேர்வர்கள் தேர்வு இடங்களுக்குச் சென்று வர ஏதுவாக பொதுப் போக்குவரத்தை தேவையான அளவுக்கு இயக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு தேர்வாணையம் உரிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.