Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM

தேசிய அளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு 4-வது இடம்

கோவை

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தரவரிசையில், தேசிய அளவிலான மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கடந்த 2020-ம் ஆண்டுக்கான இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகதரவரிசையில் 8-வது இடத்தைபெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம், நாட்டில் உள்ள 67 வேளாண் நிறுவனங்களில் 8-வது இடத்தையும், தேசிய அளவிலான மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் 4-வது இடத்தையும், தென்னிந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே 2-வது இடத்தையும் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) அ.சு.கிருஷ்ணமூர்த்தி கூறியது:

பல்கலைக்கழக ஆசிரியர்களின் சீரிய பயிற்சி வகுப்புகள் மூலம், மாணவர்கள் அளவிலான இளநிலை, முதுநிலை ஆராய்ச்சி ஊக்கத்தொகை எண்ணிக்கையைப் பெற்றதன் வாயிலாக கல்விப் பரிமாணத்தில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இதை ஒரு சவாலாக ஏற்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை சீரிய முயற்சிகள் மற்றும் திட்டமிடல் மூலம் அதிகளவில் பிரசுரித்து நிதி ஆதாரங்களையும் பெருக்கியதன் மூலம் ஆராய்ச்சிப் பரிமாணத்தில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற முடிந்தது. இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு, பல்வேறு விருதுகளைப் பெற தீவிர ஊக்குவிப்பு அளிக்கப்பட்டது.

மேலும், வேளாண் விரிவாக்கத்தில் அதிகளவிலான செயல் விளக்கங்கள், வானொலி உரைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. இடுபொருள் வணிகர்கள், அரசு சாரா அமைப்பினர், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருக்கு அதிக பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதிகளவிலான சர்வதேச மாணவர்களை ஈர்த்ததன் மூலம், மாணவர்களின் பன்முகத் தன்மையை அதிகரித்து, மதிப்பெண்களைக் கூட்ட முடிந்தது.

இந்த தரவரிசை மூலம் பல்கலைக்கழகம் நிதிகளை ஈர்ப்பதற்காகவும், இன்னும் கூடுதலாக சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்காகவும், கூட்டு ஆராய்ச்சிக்கான கூடுதல் வழிகளுக்காகவும் உலக அரங்கில் தன்நிலையை மேம்படுத்தவும் முடியும். இனிவரும் நாட்களில் பல்கலைக்கழகம் முதல் 3 இடங்களில் இடம்பிடிக்க முனைப்புடன் செயல்பட்டு உச்சத்தை எட்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x