Last Updated : 05 Dec, 2021 04:06 AM

 

Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் நடப்பு ஆண்டில் இருந்துதான் அரசுக் கட்டணம் வசூலிக்கப்படும்: போராடிய மாணவர்களுக்கு ஏமாற்றம்

விருத்தாசலம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் நடப்பு ஆண்டில் சேரும் மாணவர்களுக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும்; 2-ம் ஆண்டில் இருந்து இறுதி ஆண்டு வரை பயில்வோர் பழைய அதிகப்படியான கட்டணத்தையே கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் போராடிய மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின்கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, நர்சிங் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. ‘அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தும்’ என அறிவிக்கப்பட்டு, 2013-ம் ஆண்டுமுதல் அரசு நிதியின்கீழ் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. ஆனாலும், இங்குள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கட்டணம் பிற தனியார் கல்லூரிகளுக்கு இணையாக வசூலிக்கப்பட்டது.

‘மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிப்பதைப் போன்று, இங்கும் வசூலிக்க வேண்டும்’ என மாணவர்கள், 2020 டிசம்பர் 27 முதல் 58 நாட்கள் தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து 2021 ஜனவரி 29-ம் தேதி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுதாதாரத் துறைக்கு மாற்றப்பட்டு, ‘அரசுக் கட்டணமே வசூலிக்கப்படும்’ என அப்போதைய அதிமுக அரசு உறுதியளித்தது.

அதன்படி எம்பிபிஎஸ் பாடப் பிரிவுக்கு ரூ.13,610, பிடிஎஸ் பாடப் பிரிவுக்கு ரூ.11,610, பட்ட மேற்படிப்புக்கு ரூ.30 ஆயிரம், பட்ட மேற்படிப்பு பட்டயப் பாடப் பிரிவுக்கு ரூ.20 ஆயிரம், பிஎஸ்சி (செவிலியர்) இயன்முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவப் பாடப் பிரிவுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாணவர்கள் 58 நாட்களாக நடத்தி வந்த தொடர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் 2-ம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்கள் தங்களது கல்விக் கட்டணத்தை பழைய முறைப்படியே செலுத்தும்படி கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் முறையிட்டபோது, “நடப்புக்கல்வி ஆண்டு முதல்தான் திருத்திஅமைக்கப்பட்ட கட்டணம் பொருந்தும்; எனவே நடப்புக் கல்வி ஆண்டில் சேரும் மாணவர்கள்தான் திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த முடியும்” என தெரிவித்துள்ளனர்.

இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “நாங்கள் போராட்டம் நடத்தியபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்துஎங்களுக்கு ஆதரவளித்த, தற்போதைய முதல்வர், கட்டணக் குளறுபடியை ஆராய்ந்து,அனைத்து மாணவர்களுக்கும் திருத்திஅமைக்கப்பட்ட கட்டணம் பொருந்தும்” என்ற அறிவிப்பை வெளியிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, “நடப்புக் கல்வி ஆண்டில்சேரும் மாணவர்களுக்கு மட்டுமே திருத்திஅமைக்கப்பட்ட கட்டணம் பொருந்தும். அதில் திருத்தம் செய்யப்பட்டால், படித்து முடித்து வெளியே சென்ற மாணவர்களும் தங்களுக்கும் பழைய கட்டணமே வசூலித்து, கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பித் தருமாறு கேட்கக்கூடும்” என்று கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x