

ஓசூரில் 3-வது உலக குங்ஃபூ தின விழாவில் போதி தருமர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில், குங்ஃபூ தற்காப்புக் கலை பயிற்சி முடித்த 23 மாணவ, மாணவிகளுக்கு கருப்பு பெல்ட், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரி விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு குங்ஃபூ சங்கத்தின் சார்பில் உலக குங்ஃபூ தின விழா இன்று நடைபெற்றது. இதற்கு இந்திய குங்ஃபூ சங்கத்தின் பொதுச் செயலாளர் திருப்பதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு குங்ஃபூ சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.வி.ஏ.தங்கம் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில் ஓசூர் ஏஎஸ்பி அரவிந்த் கலந்துகொண்டு குங்ஃபூ தற்காப்புக் கலையை முறையாகக் கற்று வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்ற 23 மாணவ, மாணவிகளுக்கு கருப்பு பெல்ட், கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு குங்ஃபூ தற்காப்புக் கலை பயிற்சி அளிப்பதில் சிறப்பாகச் சேவையாற்றி வரும் தமிழ்நாடு குங்ஃபூ சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.வி.ஏ.தங்கம் சாதனையைப் பாராட்டி அவருக்கு குங்ஃபூ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை இந்திய குங்ஃபூ சங்கப் பொதுச் செயலாளர் திருப்பதி வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் குங்ஃபூ தற்காப்புக் கலையின் வீர சாகசங்களை மாணவ, மாணவிகள் நிகழ்த்திக் காட்டினர். விழா முடிவில் குங்ஃபூ தற்காப்புக் கலையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான கருந்தரங்குக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளில் குங்ஃபூ தற்காப்புக்கலைப் பயிற்சியாளர் மாஸ்டர் மதன் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.