

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்க வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) ‘ஸ்டார்ஸ்’ எனும் திட்டத்தை தொடங்கி சேவையாற்றி வருகிறது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளில் படித்து மாவட்ட அளவில் முதலிடம் பெறும் ஒரு மாணவன், ஒரு மாணவிக்கு இந்த வாய்ப்பை விஐடி நிர்வாகம் வழங்கி வருகிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இந்த ஆண்டு ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின் மூலம் தேர்வான மாணவ மாணவிகளுக்கு சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்தை நேற்று (நவ.16) தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். விஐடி துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், சென்னை விஐடி ஸ்டார்ஸ் ஒருங்கிணைப்பாளர் பி.பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இத்திட்டத்தின் மூலம் சேரும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழித் திறன் பயிற்சி, கணினிப் பயிற்சி, பேச்சு திறன் மற்றும் ஆளுமை வளர்ச்சி, ஆலோசனை/வழிகாட்டுதல், அனுபவமிக்க ஆசிரியர்களின் சிறப்பு வகுப்புகள் மற்றும் வளாக நேர்காணலுக்கு உறுதுணையாக இருத்தல் என தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படுகின்றன.
2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 727 பேர் வாய்ப்பு பெற்றிருக்கின்றனர். இந்தக் கல்வி ஆண்டில் சென்னையின் 3 வருவாய் மாவட்டங்களிலிருந்து 5 பேர் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து 74 மாணவ மாணவிகள் ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின் மூலம் விஐடியின் வேலூர் மற்றும் சென்னை வளாகங்களில் இலவசக் கல்வி பெற உள்ளனர்.