

பள்ளிக் குழந்தைகளின் திறனைக் கண்டறிய நடத்தப்பட்ட தேசியத் திறன் கணக்கெடுப்பு மொழிப்பாடத்தில் தமிழுக்குப் பதிலாக இந்தி வந்ததால் பல குழந்தைகள் அப்பாடங்களை தவிர்த்ததாகப் புதுச்சேரியில் குறிப்பிட்டனர். இதன் விவரங்களைச் சேகரித்து மத்தியக் கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பக் கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.
பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காக மத்தியக் கல்வி அமைச்சகம் குறிப்பிட்ட இடைவெளிகளில் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடையே, தேசியத் திறன் கணக்கெடுப்பை (நாஸ்) நடத்தி வருகிறது.
இவ்வருடம், இந்த கணக்கெடுப்பு கடந்த 2017க்குப் பிறகு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேசியத் திறன் கணக்கெடுப்பு 3, 5, 8 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களிடையே கணிதம், மாநில மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் நடந்தது.
மத்தியக் கல்வி அமைச்சகம், இந்த கணக்கெடுப்பை நடத்தும் வழிமுறைகளையும், கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியலையும் ஏற்கெனவே அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கி இருந்தது. புதுச்சேரியில், இந்த தேசியத் திறன் கணக்கெடுப்பு 313 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 14,749 மாணவ, மாணவிகளிடம் நடந்தது. இந்தக் கணக்கெடுப்பு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் நடந்தது.
கணக்கெடுப்பு தொடர்பாகப் பள்ளி வட்டாரங்களில் விசாரித்தபோது, "பத்தாம் வகுப்பில் மட்டும் மொழிப்பாடம் இருந்தது. அதில், தமிழ், இந்தி ஆகியவை இடம்பெற்றிருந்தன. புதுச்சேரியில் பலரும் மொழிப்பாடமாகத் தமிழைக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் பல பள்ளிகளில் தமிழுக்குப் பதிலாக இந்தி பாடம் மொழிப்பிரிவில் வந்தது. அதை ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்தோம்" என்று தெரிவித்தனர்.
இதுபற்றிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவிடம் கேட்டதற்கு, "புதுச்சேரி முழுவதும் எவ்வளவு பேருக்குத் தமிழுக்குப் பதிலாக இந்தி மொழிப் பாடம் மாறி வந்தது என்ற விவரத்தைச் சேகரித்து வருகிறோம். அதனைத் தேர்வு நடத்திய மத்திய கல்வி அமைச்சகத்துக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.