

ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்களுக்கு ஆதரவளிக்க பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி அறக்கட்டளை அடல் இன்குபேஷன் சென்டர் தேர்வாகியுள்ளது. அத்துடன் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் கிடைத்துள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்டார்ட்அப் இன்குபேஷன் சென்டரான பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி அறக்கட்டளை அடல் இன்குபேஷன் சென்டரானது, ஸ்டார்ட்அப் இந்தியா சீடு ஃபண்டு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் இந்திய அரசின் தொழில்துறை மற்றும் உள்ளார்ந்த வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் நிபுணர்கள் ஆலோசனைக் குழு கூட்டத்தில் ரூ. 3 கோடி நிதியை இத்திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
இதுபற்றி அடல் இன்குபேஷன் சென்டர் தலைமை செயல் அலுவலர் விஷ்ணுவர்தன், செயலாக்க இயக்குநர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கூறுகையில், "உள்ளூர் சூழலமைப்பில் தொடங்கப்பட்டுள்ள இளம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதிகம் தேவைப்படுகின்ற ஆதரவு சேவைகளை இது வழங்கி வருகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு, சமுதாயத்தில் சமூக - பொருளாதார வளர்ச்சியையும் எட்ட உதவுகிறது.
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்நிதியானது, தகுதியுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு, அறக்கட்டளையால் மேலாண்மை செய்யப்படும். கருத்து உருவாக்கம், முதல் மாதிரி உருவாக்கம், தயாரிப்புப் பொருட்களின் மீது பரிசோதனைகள், சந்தையின் நுழைவு மற்றும் வர்த்தகமயமாக்கல் ஆகியவற்றிற்கு அதிகம் தேவைப்படும் நிதிசார் உதவியை அவற்றுக்கு இது வழங்கும். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தநிலைக்கு முன்னேற்றம் காண்பதற்கு குறிப்பிடத்தக்க ஆதரவு தர முடியும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் போன்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை நகரங்களில் ஆரம்ப நிலை மற்றும் வளர்ச்சி நிலை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இன்னும் அதிக அளவிலான வாய்ப்புகளைக் கணிசமாக உருவாக்கும். புதுச்சேரியில் தங்களது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்குவதற்கு ஆர்வமுள்ள இளம் மாணவ தொழில்முனைவோர்களுக்கு அதிக அளவிலான வாய்ப்புகளை இது உருவாக்கும்" என்று தெரிவித்தார்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களை ஆண்டு முழுவதும் அனுப்பலாம். வலைதளம் வழியாக ஒரே நேரத்தில் மூன்று இன்குபேட்டர்களுக்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். துறைகளுக்கான கட்டுப்பாடு ஏதுமில்லை.
கூடுதல் தகவல் பெற: ceo@aicpecf.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இத்திட்டத்திற்கான தகுதிநிலை மற்றும் பிற வழிகாட்டல்கள் குறித்து மேலும் அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தலாம். https://seedfund.startupindia.gov.in/