Published : 30 Oct 2021 01:12 PM
Last Updated : 30 Oct 2021 01:12 PM

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு நவ.13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''2021- 2022ஆம் கல்வியாண்டில், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2022 ஜனவரி மாதம் 23-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTSE) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13.11.2021. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.

பொதுவான அறிவுரைகள்

* தேர்வர்கள் தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தங்கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.
* போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

முக்கியக் குறிப்பு:

தேர்வர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போதே தங்களது வகுப்புச் சான்றிதழை (Community Certificate) (SC / ST /OBC (Non-Creamy Layer)/ EWS(Economically Weaker Section) தவறாது சமர்ப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியரால் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்போது, பதிவேற்றம் செய்யப்படாத வகுப்புச் சான்றிதழ்கள் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்''.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x