Published : 28 Oct 2021 03:07 AM
Last Updated : 28 Oct 2021 03:07 AM

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் 2-வது பெற்றோர்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கருத்து

திருவள்ளூர் அருகே கசுவா கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனமான சேவாலயாவின் 33-ம் ஆண்டு விழா மற்றும் நன்கொடையாளர்களின் நிதியின் மூலம் ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி கட்டிடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். விழாவில், அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது:

மகாத்மா காந்தி, பாரதியார், விவேகானந்தர் ஆகியோரின் வரிகளைத் தாங்கி, சேவை மனப்பான்மையுடன் சேவாலயா வெற்றிகரமாக 33 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது. இது நூற்றாண்டை கடந்து சேவையாற்ற வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவச் செல்வங்களை கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ஆகவே, பள்ளி மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை மனதில் வைத்து நன்கு படித்து, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 2-வது பெற்றோர் ஆவர். ஏனெனில், பெற்றோரிடம் செலவிடும் நேரத்தை விட பள்ளிகளில் ஆசிரியர்களிடம் அதிக நேரம் செலவிடுகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் மீது அக்கறை கொண்டு தனி கவனம் செலுத்தி கல்வியை வழங்க வேண்டும்.

நம் மீதுள்ள அக்கறையால்தான் ஆசிரியர்கள் கண்டிக்கின்றனர் என்பதை மாணவர்கள் உணர்ந்து, தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம், எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி, பரந்தாமன், சேவாலயா நிறுவனர் முரளிதரன் மற்றும் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x