

புதுவைக்குத் தனிக் கல்வி வாரியம் அமைப்பது தொடர்பாக ஏற்கெனவே அறிவிப்புகளை வெளியிட்டோம். இதற்கு அதிக நிதி தேவைப்படும். எனவே தனிக் கல்வி வாரியத்தை நிறுத்தி வைத்துள்ளோம் என்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் புதுவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தனியார் பள்ளிகள் கடந்த ஆண்டு வசூலித்த கட்டணத்தையே இந்த ஆண்டும் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். கட்டணம் அதிகம் வசூலிப்பதாக வாய்வழியாகப் பெற்றோர்கள் புகார் அளித்தாலும் எழுத்துப்பூர்வமாகப் புகார் தர மறுக்கின்றனர். எழுத்துப்பூர்வப் புகார் அளித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடத்துவது குறித்து ஆளுநர், முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்வோம்.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 8ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அவர்களுக்கு அரை நாள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும். எனினும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் திறக்கப்படாது.
புதுவைக்குத் தனிக் கல்வி வாரியம் அமைப்பது தொடர்பாக ஏற்கெனவே அறிவிப்புகளை வெளியிட்டோம். இதற்கு அதிக நிதி தேவைப்படும். எனவே தனிக் கல்வி வாரியத்தை நிறுத்தி வைத்துள்ளோம். தனிக் கல்வி வாரியம் அமைப்பதே அரசின் நோக்கம்.
மாணவர்களுக்கு இலவசப் பேருந்துகளை இயக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கெனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. சீருடை உள்ளிட்ட பிற பொருட்கள் விரைவில் வழங்கப்படும். 18 வயதைக் கடந்த மாணவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காகப் பள்ளிகள் முழுமையாக இயங்க வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகளையும், சிபிஎஸ்இ பள்ளிகளையும் முழு நேரம் இயங்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர். இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு அரை நாள் வகுப்பு இருந்தாலும் மதிய உணவு தருவது தொடர்பாக ஆலோசிக்கப்படும்."
இவ்வாறு கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.