Published : 27 Oct 2021 03:08 AM
Last Updated : 27 Oct 2021 03:08 AM

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கல்வித் துறை அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா அனுப்பிய சுற்றறிக்கை:

வடகிழக்கு பருவமழை காலத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து விதமான பள்ளிக் கட்டிடங்களும் உரிய வழிமுறைகளை பின்பற்றி அமைந்துள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

மின் இணைப்புகளை கண்காணிப்பது, திறந்தவெளி கால்வாய்களை தூர்வாரி மூடுவது, குழிகளை நிரப்பி சீரமைப்பது, ஆபத்தான நிலையில் உள்ள மரக் கிளைகளை வெட்டி அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாடியில் தடைபட்ட வடிகால்களை சுத்தம் செய்ய வேண்டும்.

அதேபோல, பழுதடைந்த கட்டிடங்களின் பயன்பாட்டை தவிர்க்கவேண்டும். சுகாதாரம், உயிர்பாதுகாப்புக்கு செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்துமாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். இதுதொடர்பாக செய்யப்பட்ட பணி விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

13 பள்ளிகளில் சுற்றுச்சுவர்

இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

திருச்சி, தேனி, திண்டுக்கல், அரியலூர், மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் இயங்கும் 13 (6 மேல்நிலை, 7 உயர்நிலைப் பள்ளிகள்) ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், பள்ளிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்கும் வகையிலும் 3,950 மீட்டர் நீளத்துக்கு ரூ.3 கோடியே 83 லட்சத்து 76,571 மதிப்பில் சுற்றுச்சுவர் கட்ட அரசு ஆணையிடுகிறது.

இந்த பணியானது தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் (தாட்கோ) உரிய டெண்டர் விதிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படும். மேலும், சுற்றுச்சுவர் கட்டுமான பணியை நடப்பு நிதியாண்டிலேயே முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x