Published : 25 Oct 2021 03:09 AM
Last Updated : 25 Oct 2021 03:09 AM

குழந்தைகளின் கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் நோக்கத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: மரக்காணத்தில் வரும் 27-ல் முதல்வர் தொடங்கி வைப்பார் என தகவல்

சென்னை

பள்ளிக் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் "இல்லம் தேடி கல்வி" திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் தேதி மரக்காணத்தில் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா பரவல் காரணமாக ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் வகையில் ‘இல்லம் தேடிக் கல்வி’என்ற திட்டத்தை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் செயல்படுத்த உள்ளது.

இத்திட்டம் ரூ.200 கோடி செலவில் காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி,நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.

இப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதகாலம் தினமும் ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். தற்போது, தன்னார்வலர்கள் பதிவு ஆன்லைன் வாயிலாக (www.illamthedikalvi.tnschools.gov.in) நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இல்லம் தேடிகல்வித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கற்பித்தல் மையங்கள் பாதுகாப்பான, சுகாதாரமான, குழந்தைகள் அணுகக் கூடிய வகையில் தேர்வு செய்யப்பட வேண்டும். போதுமான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் இடம் மதச்சார்பற்ற மற்றும் பாகுபாடு அற்ற இடமாக இருக்க வேண்டும். அரசு கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் போன்ற இடங்களுக்கு முன்னுரிமை அளிக் கப்பட வேண்டும்.

தன்னார்வலர்களின் கல்வித் தகுதியைப் பொறுத்தவரை 12-ம்வகுப்பு முடித்தவர்கள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் 6 முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கும் கற்பிக்க தகுதியுடையவர் ஆவர். அதே பகுதியைச் சேர்ந்த பெண் தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 20 குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட வேண்டும்.

வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வழங்கும். வகுப்புகள் தினமும் மாலை 5 மணி இரவு 7 மணி வரை ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் நடத்தப்படவேண்டும். தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்படும். ஊக்கத்தொகையும் உண்டு. மாநில அளவிலான இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடைபெறும்.

இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் தேதி மரக்காணத்தில் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x