Published : 18 Oct 2021 12:47 PM
Last Updated : 18 Oct 2021 12:47 PM

நர்சரி பள்ளிகள் திறப்பு; இல்லம் தேடிக் கல்வி திட்டம்: முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை

நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்தும், இல்லம் தேடிக் கல்வி திட்டம் பற்றியும் தமிழக முதல்வருடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கரோனா தொற்றுக் காலத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், இல்லம் தேடிக் கல்வி என்ற புதிய திட்டம் இன்று (அக்.18-ம் தேதி) முதல் செயல்படுத்தப்படும் என்று கடந்த அக்டோபர் 2-ம் தேதி திருச்சி கிராம சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமும் 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் இல்லம் தேடிக் கல்வி என்னும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான கையேட்டை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று மாலை வெளியிட உள்ளார்.

அதேபோல அண்மையில் வெளியான ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசாணையில், நர்சரி பள்ளிகளும் திறக்கப்படுவது போல சேர்த்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நர்சரி பள்ளிகளைத் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளதாகவும், இது தொடர்பான, தெளிவான சுற்றறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்தும், இல்லம் தேடிக் கல்வி திட்டம் பற்றியும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதல்வருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையின் முடிவில், அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x