Last Updated : 16 Oct, 2021 07:37 PM

 

Published : 16 Oct 2021 07:37 PM
Last Updated : 16 Oct 2021 07:37 PM

ஆசிரியர்களுக்கு பூஜ்யக் கலந்தாய்வு நடத்தப்படுமா?- அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குளிர்சாதன (ஏ.சி)  பேருந்து சேவையை தொடங்கி வைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் அதிகாரிகள்.

திருச்சி

மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு நடந்ததுபோல, ஆசிரியர்களுக்கு பூஜ்யக் கலந்தாய்வு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடி வரை குளிர்சாதன நகரப் பேருந்து சேவை தொடக்க விழா திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்து, பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:

''திருச்சி துவாக்குடியிலிருந்து மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள் வரை கூடுதலான குளிர்சாதனப் பேருந்துகளை இயக்க அனுமதி கேட்டுள்ளோம். மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு நடந்ததுபோல, ஆசிரியர்களுக்கு பூஜ்யக் கலந்தாய்வை நடத்த வாய்ப்பில்லை. இதுகுறித்து ஏற்கெனவே விவாதித்துள்ளோம். ஆசிரியர்களிடம் இருந்து நிறைய மனுக்கள் வருகின்றன. எனவே இதுதொடர்பாக கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறந்த பின்னரும் கல்வித் தொலைக்காட்சி தொடர்ந்து செயல்படும். பள்ளிக் கல்வித்துறையில் பணிக் காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கெனவே நீட் தேர்வுக்கென சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தற்போது 120 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதை அதிகப்படுத்தும் திட்டமில்லை''.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் எஸ்.சக்திவேல், முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் கே.எஸ்.எம் கருணாநிதி, ஒன்றியக்குழுத் தலைவர் சத்யா கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x