Published : 15 Oct 2021 04:24 PM
Last Updated : 15 Oct 2021 04:24 PM

பொறியியல் துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது

சென்னை

பொறியியல் துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகப் பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்புக் கல்வி ஆண்டில் 440 பொறியியல் கல்லூரியில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில் துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’’பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு முடிவில் நிரம்பாத இடங்களுக்கு, பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில், பொதுப் பிரிவு, தொழிற்கல்வி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுப் பிரிவில் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் அக்டோபர் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, விண்ணப்பத் தொகை ரூ.500-ஐச் செலுத்தவேண்டும். அதேபோல், மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போதே, அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு வழிகாட்டத் தமிழகம் முழுவதும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

துணைக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் அக்.19-ம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து அக்டோபர் 20, 21-ம் தேதிகளில், மாணவர்களுக்கான கல்லூரி மற்றும் பிரிவைப் பதிவு செய்வதற்கான வசதி தொடங்கப்படும். அக்.22-ம் தேதி கல்லூரி உத்தேச ஒதுக்கீடும், 23-ம் தேதி இறுதி ஒதுக்கீடும் வழங்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: care@tneaonline.org என்ற இ மெயில் முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x