Published : 08 Oct 2021 03:12 AM
Last Updated : 08 Oct 2021 03:12 AM

சென்னை வியாசர்பாடி உட்பட 10 அரசு கல்லூரிகளில் ரூ.1 கோடியில் மின் நூலகங்கள் அமைக்கப்படும்: நவம்பரில் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்

சென்னை வியாசர்பாடி, பரமக்குடி, அரியலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தலா ரூ.10 லட்சம் செலவில் மின் நூலகங்கள் அமைக்கப்படுகின்றன. இவை அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் 150 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஏ, பிகாம், பிபிஏ, பிஎஸ்சி, பிசிஏ உள்ளிட்ட இளங்கலை, இளம் அறிவியல் படிப்புகளில் 92 ஆயிரம் இடங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இலவச கல்வி என்பதால், அரசு கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த கல்வி ஆண்டில் கூடுதல் விண்ணப்பங்கள் வரப்பெற்றதால், இடங்களை 25 சதவீதம் அதிகரிக்க உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியது.

ஆங்கில பேச்சுப் பயிற்சி

அரசு கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் மேம்பாட்டுக்காகவும், அவர்களை வேலைவாய்ப்புக்கு உகந்தவர்களாக உருவாக்கும் வகையிலும் உயர்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆங்கில பேச்சுப் பயிற்சி, திறன் மேம்பாடு உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

அனைத்து கல்லூரிகளிலும் நூலகங்கள் இயங்கி வரும் நிலையில், கூடுதலாக சென்னை மாநிலக் கல்லூரி, ராணி மேரி மகளிர் கல்லூரி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, நீலகிரி, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கோவைஅரசு கல்லூரிகள் உட்பட 17 கல்லூரிகளில் மின் நூலகங்கள் (டிஜிட்டல் லைப்ரரி) இயங்கி வருகின்றன.

நூலக வளாகத்திலேயே தனிஅறை அமைக்கப்பட்டு 10 கணினிகளுடன் மின் நூலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை கல்லூரிஇயங்கும் நேரத்தில் செயல்படும்.

மின் நூலகத்தில் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக அடையாள எண், கடவுச்சொல்லை பயன்படுத்தி தேவையான புத்தகங்களை வாசிக்கலாம். தேவையான பக்கங்களை பென்டிரைவ்வில் பதிவுசெய்து கொள்ளலாம். இ-மெயிலிலும் அனுப்பலாம். இந்த 17 மின் நூலகங்களில் ரூ.85 லட்சம் செலவில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில், சென்னை வியாசர்பாடி, தருமபுரி, பரமக்குடி, அரியலூர், முசிறி, விழுப்புரம், சிவகங்கை, கும்பகோணம், திண்டுக்கல், திருநெல்வேலியில் உள்ள 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தலா ரூ.10 லட்சம் செலவில் மின் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன.

அரசுக்கு இதற்கான கருத்துரு அனுப்பப்பட்டு, நவம்பரில் மின் நூலகங்கள் அமைக்கப்படும் என்று மாநில கல்லூரிக் கல்வி இயக்கக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x