

நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கான திருத்திய வரைவு தரவரிசைப் பட்டியலை சென்டாக் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேபனைகளை வெள்ளிக்கிழமை மாலைக்குள் தெரிவிக்கலாம்.
புதுவையில் நீட் அல்லாத படிப்புகளில் சேர சென்டாக் நிர்வாகம் விண்ணப்பம் பெற்றது. பிடெக், பிஎஸ்சி தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், பிஎஸ்சி நர்சிங், பிசியோதெரபி, பி.ஃபார்ம், பிஏ, எல்எல்பி, டிப்ளமோ, கலை அறிவியல் உட்பட படிப்புகளுக்கு 10 ஆயிரத்து 684 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் கடந்த 24-ம் தேதி வெளியிடப்பட்டது. ஆட்சேபனை இருந்தால் 27-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டது. மாணவர்கள் தங்களின் ஆட்சேபனைகளைப் பதிவிட்டனர். மாணவர்களின் கருத்துகள் பெறப்பட்டு, அவை சரி செய்யப்பட்டு திருத்தப்பட்ட வரைவு தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலை சென்டாக் இணையதளத்தில் மாணவர்கள் பார்வையிடலாம். இதிலும் ஆட்சேபனைகள் இருந்தால் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.