

கர்நாடக மாநிலத்தில் நடப்பு ஆண்டில் இருந்து நான்கு கல்லூரிகளில் கன்னட வழியில் பொறியியல் பாடம் கற்பிக்கப்படும் என அம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் அஷ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூருவில் இன்று அஷ்வத் நாராயண் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’கர்நாடகாவில் மாணவர்களுக்குக் கன்னட மொழியில் பொறியியல், மருத்துவம் கற்பிக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் நீண்ட காலமாகக் கோரி வருகின்றனர். அதனை ஏற்று, கன்னட வழியில் பொறியியலைக் கற்பிப்பதற்கு அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பித்தது. இதனைப் பரிசீலித்த தேசிய அங்கீகார வாரியம் நடப்புக் கல்வி ஆண்டில் இருந்து 4 அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் கன்னட வழியில் பொறியியல் கற்பிக்க அனுமதி வழங்கியுள்ளது.
உயர் கல்வித்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதிலும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் 4 முக்கியக் கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளனர். அதன்படி பால்கேவில் உள்ள பீமன்னா கான்ட்ரே இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (சிவில்), விஜயப்புராவில் உள்ள டாக்டர் பிஜி ஹலகட்டி பொறியியல் கல்லூரி (சிவில்), சிக்கப்பள்ளாப்பூராவில் உள்ள எஸ்.ஜே.சி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (மெக்கானிக்கல்), மைசூருவில் உள்ள மகாராஜா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (மெக்கானிக்கல்) ஆகிய 4 பொறியியல் கல்லூரிகளில் கன்னட வழியில் பொறியியல் கற்பிக்கப்படும்.
முதல் கட்டமாக ஒவ்வொரு கல்லூரியிலும் 30 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதற்கான வகுப்புகள் இம்மாத இறுதியில் தொடங்கும். கன்னட வழியில் பயில்வோரை ஊக்குவிக்கும் நோக்கில் குறைந்த கட்டணம், கல்வி ஊக்கத்தொகை ஆகியவையும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது’’.
இவ்வாறு அமைச்சர் அஷ்வத் நாராயண் தெரிவித்தார்.