Published : 01 Oct 2021 03:19 AM
Last Updated : 01 Oct 2021 03:19 AM
இன்றைய சூழலில் சிவில் இன்ஜினீயர்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாக வல்லுநர்கள் பங்கேற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை காரப்பாக்கம் கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரி சார்பில், ‘இன்றைய வளர்ச்சி சூழலில் சிவில் இன்ஜினீயரிங் துறையின் பங்கு மற்றும் அதன் எதிர்காலம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
இணையவழியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சர்வதேச அளவில் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர் சி.என்.ராகவேந்திரன் வழிநடத்தினார். ஆர்விஎன்எல் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் சிவசுப்பிரமணியன், கிரண்ட்போஸ் பம்ப்ஸ் தொழில்துறை தலைமை நிர்வாகி சங்கர் ராஜாராம் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ராகவேந்திரன் பேசும்போது, “கட்டிடக்கலை நிபுணர்களும், சிவில் இன்ஜினீயர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். கங்கைகொண்ட சோழபுரத்தில் தோண்டியெடுக்கப்பட்ட கட்டிடங்களின் சிறப்புகளில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம். கட்டிடக்கலை நிபுணர்களும், சிவில் இன்ஜினீயர்களும் புதுமையாக நிறைய விஷயங்களை செய்ய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டவர்கள்” என்றார்.
சிவசுப்பிரமணியன் பேசும்போது, “இன்ஜினீயரிங் கூறுகளை எளிமையாக வைத்திருப்பதுதான் அத்துறை வெற்றியின் தாரக மந்திரம். புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானத்தில் அஸ்திவாரம், கட்டிட சீரமைப்பு, கடல்அரிப்பு தாக்காத தன்மை என ஒவ்வொரு விஷயத்திலும் நிறைய சவால்கள் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. வரும் காலத்தில் இந்திய ரயில்வே துறையில் சூரியஒளி மின்சாரத்தை மிகப்பெரிய அளவில் பயன்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 50 ரயில்வே மேம்பாலங்களின் பணிகள் ஒருநாள்கூட ரயில் போக்குவரத்தை நிறுத்தாமல் மேற்கொள்ளப்பட்டது மிகப்பெரிய சாதனை” என்றார்.
சங்கர் ராஜாராம் பேசும்போது, “மின்சாரம் மற்றும் நீர்ப்பாசன தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் சூரியஒளி பம்புகளை பொருத்தியுள்ளோம். இந்த துறையில் சிவில் இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. அவர்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது” என்றார்.
முன்னதாக, கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் பி.தெய்வசுந்தரி வரவேற்றார். சிவில் இன்ஜினீயரிங் துறை தலைவர் வி.வந்தனா தேவி கலந்துரையாடலை நெறிப்படுத்தி அறிமுகவுரை ஆற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT