

கோவையில் மாநகராட்சிப் பள்ளிக்கு திடீரெனச் சென்ற ஆணையர், நாளிதழ் வாசிக்க சொல்லி அங்கிருந்த மாணவர்களின் திறனை ஆய்வு செய்தார்.
கோவையில் மாநகராட்சிப் பள்ளிகளின் உள்கட்டமைப்புத் தரம் மற்றும் மாணவர்களுக்கான கற்பித்தல் திறன், தேவைகள் குறித்து ஆணையர் ராஜகோபால் சுன்கரா அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வெரைட்டி ஹால் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறைக்குச் சென்ற ஆணையர், வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
பிறகு தமிழ் நாளிதழ் ஒன்றை எடுத்து, குறிப்பிட்ட செய்தியை சில மாணவர்களை ஒவ்வொருவராக அழைத்து வாசிக்கச் சொல்லி, மாணவர்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் மொழித்திறன் குறித்து ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து வகுப்பறையின் கரும்பலகையில் சில கணக்குகளை எழுதி, சில மாணவர்களை ஒவ்வொருவராக அழைத்து விடை எழுதக் கூறினார். மாணவர்கள் கரும்பலகையில் எழுதிய விடைகளை பிற மாணவர்களை தங்களது நோட்டுகளில் எழுதி சரிபார்க்கக் கூறி, மாணவர்கள் நோட்டுகளில் எழுதிய விடைகளைச் சரிபார்த்தார் ஆணையர்.
இதையடுத்து பள்ளி நூலகத்தைப் பயன்படுத்தும் மாணவர்கள் யார் யார் என்பதைக் கேட்டறிந்த ஆணையர், நூலகத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் ஆஷா என்ற மாணவிக்கு மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் வாழ்க்கை குறித்த, 'அற்புத மனிதர் அப்துல்கலாம்' என்ற புத்தகத்தை, பரிசாகக் கையொப்பமிட்டு வழங்கினார்.
பிற மாணவர்களுடன் கலந்துரையாடும்போது, 'அனைத்து மாணவர்களும் பள்ளி நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும். நான் அடுத்த முறை வரும்போது ஒவ்வொரு மாணவரும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். படித்த புத்தகத்தைப் பற்றி என்னிடம் கூற வேண்டும்' என்று தெரிவித்தார்.
அதற்குப் பிறகு, பள்ளியில் உள்ள நூலகத்தை ஆய்வு செய்து, நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் குறித்துக் கேட்டறிந்தவர், பள்ளிக்கான கட்டமைப்பு வசதிகளையும் ஆய்வு செய்தார். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.வெள்ளிங்கிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.