Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் கவுரவம் காக்கப்படுமா?

திருச்சி

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசு முறையான ஊதியத்தை மாதந்தோறும் வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தமிழகத்தில் 148 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தற்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் பெரும்பாலான இடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இதிலும், கிராமப்புறங்களில் உள்ள அரசு கல்லூரிகள் கவுரவ விரிவுரையாளர்களை நம்பித்தான் உள்ளன.

அரசுக் கல்லூரிகளில் நிரந்தரஆசிரியர்களாக பணியாற்றுவோருக்கு சற்றும் குறைவில்லாத வகையில் பெரும்பாலானோர் முனைவர் பட்டம், ஸ்லெட், நெட் தேர்வுகளை முடித்த ஏறத்தாழ 3,500-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியம் தற்போதுதான் ரூ.20 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர் ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: அரசுப் பணி கிடைக்கும் என நம்பி 2008-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறேன். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை.

ஊதியத்தையும் 5 மாதங்களாக வழங்கவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகிவிட்டது. கவுரவ விரிவுரையாளர் என்பது பெயரில்தான்உள்ளதே தவிர எங்கள் வாழ்க்கையில் எவ்வித கவுரவமும் கிடைக்கவில்லை என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மண்டலச் செயலாளர் டேவிட் லிவிங்ஸ்டன் கூறியது: அரசுக் கல்லூரிக்கு வரும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பணியில் எங்களுக்கு இணையாக கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போதுள்ள காலகட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. நிரந்தர ஆசிரியருக்கான அனைத்து தகுதிகளும் உள்ள இவர்களுக்கு யுஜிசி விதிப்படி குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் மாத ஊதியம் வழங்க வேண்டும். நிரந்தரப் பணிக்கு தேர்வு நடைபெறும்போது இவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

இவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் கவனத்துக்கும் நாங்கள் கொண்டு சென்றுள் ளோம். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

2015-க்கு பிறகு அரசு கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணி நியமனத்துக்கான தேர்வை நடத்தியிருந்தாலே நூற்றுக்கணக்கான கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தர ஆசிரியர்கள் ஆகியிருப்பார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x