புதுவைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் இருவருக்கு செம்மொழித் தமிழ் விருதுகள்
கலைஞர் செம்மொழித் தமிழ் விருதைப் பெற புதுச்சேரி மத்தியப் பல்கலைகக்கழக முன்னாள் பேராசிரியர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய தமிழ் அறிஞர்களுக்கும், தொல்லியல், நாணயவியல் மற்றும் இலக்கியம் முதலானவற்றில் சிறந்த அறிஞர்களுக்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்பட்டு வருகின்றது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்காக புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் மருதநாயகம் மற்றும் முனைவர் ராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முனைவர் மருதநாயகம் பல்கலைக்கழகப் பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி 2001-ம் ஆண்டு முனைவர் மருதநாயகம் ஓய்வு பெற்றுள்ளார். வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி 2020-ம் ஆண்டு கே.ராஜன் ஓய்வு பெற்றுள்லார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் விருதுக்காகத் தேர்வான இரு பேராசிரியர்களுக்கும் புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகப் பணியாற்றி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் தலைசிறந்த தமிழ் அறிஞர்களுக்கான விருதுகளைப் பெற்றுள்ளது பல்கலைக்கழகத்திற்குப் பெருமையைச் சேர்ப்பதாகும். இதன் மூலம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகப் பணியாற்றியவர்களின் தகுதி உலகம் முழுவதும் அறியப்படுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
