Last Updated : 29 Sep, 2021 03:20 AM

 

Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற விடாமுயற்சி அவசியம்: தமிழக அளவில் முதலிடம் பெற்ற கோவை இளைஞர் அறிவுறுத்தல்

கோவை

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற விடாமுயற்சி அவசியம் என சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ள நாராயண சர்மா அறிவுறுத்தியுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வின் நடப்பு ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில், கோவை கணுவாயைச் சேர்ந்த நாராயண சர்மா, அகில இந்திய அளவில் 33-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

இத்தேர்வை எதிர்கொண்ட விதம் குறித்து, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் நாராயண சர்மா கூறியதாவது: நான் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, கணுவாயில் உள்ள கீர்த்திமான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், பி-டெக் பட்டப்படிப்பை அமிர்தா கல்லூரியிலும் படித்தேன். அப்பா வெங்கடேஸ்வர சர்மாவும், அம்மா சுஜாதா சர்மாவும் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

நான் அரசுத் துறையில் உயர்பதவிக்கு சென்று, மக்கள் பணியாற்ற வேண்டும் என்பது என் தந்தையின் கனவு. பள்ளி விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கும்போது எனக்கும், அரசுத் துறை உயர் அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

பொறியாளர் ஆசையில், அமிர்தா கல்லூரியில் பி.டெக் பிரிவில் சேர்ந்தாலும், 2014-ல் 2-ம் ஆண்டு படிக்கும்போது, சிவில் சர்வீஸ் தேர்வு மீது என் கவனம் திரும்பியது. 2017-ம்ஆண்டில் முழுமையாக அர்ப்பணித்து படித்து, 2018-ல் முதல்முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி பிரிலிம்ஸ் தேர்ச்சி பெற்றும் மெயின் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை.

2019-ம் ஆண்டில் மெயின் தேர்வு கிளியர் செய்தும், நேர்காணலில் வெற்றி பெற இயலவில்லை. 2020-ல் மீண்டும் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆக தேர்ச்சி பெற்றேன்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிப்பவர்கள் சென்னை, டெல்லிக்கு சென்று படிப்பார்கள். நான், கோவையில் இருந்தே இத்தேர்வுக்கு தயாரானேன். சென்னை, டெல்லியில் உள்ள மையங்களை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பயிற்சி பெற்றேன். கோவையில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களுக்கும், அரசு நூலகத்துக்குச் சென்றும், வீட்டில் இருந்தும் படித்தேன். தினசரி அதிகாலை 4.30-க்கு எழுந்து தினமும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் பாடங்களைப் படித்தேன். இத்தேர்வை கடினமானது என்ற பார்வையில் பார்த்தால், கடினமாகவே தெரியும். இத்தேர்வை பாசிட்டிவ் எண்ணத்தோடு பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இத்தேர்வு ஒரு ‘மைண்ட் கேம்’. இதன் வெற்றிக்கு தைரியமும், விடாமுயற்சியும் அவசியம்.

என் முழு வெற்றிக்கு என் பெற்றோர் முதன்மையான காரணம். பள்ளி தாளாளர் கோகுல் கிருஷ்ணன், போட்டித் தேர்வுக்கு தயாராக உறுதுணையாக இருந்தார் என்றார்.

பள்ளியில் சிறந்த மாணவர்

கோவை கணுவாயில் உள்ள கீர்த்திமான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஏ.கோகுல்கிருஷ்ணன் கூறும்போது, ‘‘1999-ம் ஆண்டுமுதல் இயங்கும் இப்பள்ளியில் நடக்கும் விழாக்களுக்கு, போட்டித் தேர்வுகளில் வென்ற அரசு அதிகாரிகளை சிறப்பு விருந்தினர்களாக அழைப்போம். அந்த சிறப்பு விருந்தினர்களைப் பார்க்கும்போது மாணவர்களுக்கு தாங்களும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. பள்ளித் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ‘உன்னால் முடியும்’ என கவுன்சிலிங் அளித்து, ஊக்கப்படுத்தி தேர்ச்சி பெற வைக்கிறோம். பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற சிறப்புப் பயிற்சி அளிக்கிறோம். எங்கள் ஆசிரியர்கள், மாணவர்களுடன் பேசி, உளவியல்ரீதியாக அவர்களை அறிந்து, அவர்களது கல்வி ஆர்வத்தை தூண்டுகின்றனர். இப்பள்ளியில் படித்து தற்போது, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர் நாராயண சர்மா பள்ளியில் சிறந்த மாணவராக விளங்கினார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x