Published : 27 Sep 2021 03:20 AM
Last Updated : 27 Sep 2021 03:20 AM

‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ - தலைமைப் பண்பின் அடையாளமாக திகழ்ந்த அப்துல் கலாம்: இணைய வழி சிறப்பு கலந்துரையாடலில் விண்வெளி விஞ்ஞானிகள் புகழாரம்

மாபெரும் தலைமைப் பண்பின் அடையாளமாகவே வாழ்ந்த பெருமைக்குரியவர் அப்துல் கலாம் என்று, ‘கலாமை கொண்டாடுவோம்’ இணைய வழி கலந்துரையாடல் நிகழ்வில், கலாமுடன் இணைந்து பணியாற்றிய விண்வெளி விஞ்ஞானிகள் பெருமிதத்தோடு குறிப்பிட்டனர்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 6-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணைய வழி சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு கடந்த 25-ம் தேதி நடந்தது. இதில், முன்னாள் விண்வெளி விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற இயக்குநரும், ராணுவ விஞ்ஞானியுமான டாக்டர் வி.டில்லிபாபு பங்கேற்றனர். அவர்கள் பேசியதாவது:

நெல்லை சு.முத்து: விண்வெளி துறையில் அப்துல் கலாம் 1963-ல் பணியில் சேர்ந்தார். நான் 10 ஆண்டுகள் கழித்தே அப்பணியில் சேர்ந்தேன். கலாம் 1982 வரை திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் எஸ்எல்வி-3 எனப்படும் செயற்கைக் கோள் ஏவுகணை திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

அதன் முதல் பயணம் தோல்வியில் முடிந்ததால், கலாம் சோர்வடைந்து இருந்தார். இதை கண்ட அப்போதைய இஸ்ரோதலைவர் சதீஷ் தவான், செய்தியாளர்களை தானே சந்தித்து விளக்கம் அளித்தார். அதேநேரம், அந்த தோல்வியில் இருந்துதான் கலாம் நிறைய கற்றுக்கொண்டார். ‘தோல்விதான் நமக்கு நல்ல படிப்பினை’ என்று அடிக்கடி கூறுவார். 1980 ஜூலை 18-ம் தேதி எஸ்எல்வி செயற்கைக் கோளின் 2-வதுபயணம் வெற்றிப் பயணமாக அமைந்தது. அப்போது செய்தியாளர்களை சந்திக்குமாறு கலாமை முன்னிறுத்தினார் சதீஷ் தவான்.

‘தோல்வி வரும்போது அதை ஒரு தலைவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். வெற்றியை தன் குழுவுக்கு வழங்க வேண்டும்’ என்று கலாம் எப்போதும் சொல்வார். அடுத்ததாக, எஸ்எல்வி-3 செயற்கைக் கோளும் சிறப்பாக இயங்கியது. அதில் உள்ள4 திட எரிபொருள் கூடங்களில், முதல் 2எரிபொருள் தயாரிப்புக் கூடத்தில் நான்பணியாற்றினேன். அப்போது எங்கள் நிலையத்துக்கு கலாம் வருவார். இரவு பகல் பாராமல் அங்கு வந்து, அனைத்து பணியாளர்களிடமும் அன்போடு பேசுவார். பாரபட்சமின்றி அனைவரையும் ஊக்குவிப்பார். இதை மாபெரும் தலைமைப் பண்பின் அடையாளமாகவே பார்க்கிறேன்.

வி.டில்லிபாபு: விண்வெளி துறையில் நாம் தொடர் தோல்விகளை சந்தித்த காலகட்டம் அது. அப்போது, எஸ்எல்வி-3 எனும் செயற்கைக் கோள் ஏவுகணை ஊர்தி வடிவமைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இது மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த கலாம் எனும் விண்வெளி தொழில்நுட்ப ஆளுமை பொதுவெளியில் அறிவியலின் பிம்பமாக பெரிய அளவில் அறியப்பட்டார்.

கலாம் எப்போதுமே ஊழியர்கள் முதல், உயர் அதிகாரிகள் வரை அனைவரிடமும் அன்போடு பழகி, சிறப்பான முறையில் பல திட்டங்களில் வெற்றிகளைக் கண்டவர். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளர், தலைமை விஞ்ஞானி, அறிவியல் ஆலோசகர் என வெவ்வேறு நிலைகளில் பணியாற்றிய காலங்களிலும் அவரது பொதுவான சமுதாயப் பணியாக, தொடர்ந்து பல்வேறு நூல்கள் எழுதியதை குறிப்பிட வேண்டும்.

முதலாவதாக, தொழில்நுட்பம் சார்ந்தநூலை எழுதியவர், அடுத்து‘இந்தியா – 2020’ எனும்இந்தியாவின் தொலைநோக்கு திட்டம் சார்ந்த நூலைஎழுதினார். 3-வது நூலாககலாம் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ மிகவும் பிரபலமான புத்தகம். தனது தொலைநோக்கு சிந்தனையாலும், அறிவியல் பார்வையாலும் இந்தியா அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்த நாடாக வேண்டும் என்று செயல்பட்டவர் கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வை காணத் தவறியவர்கள் https://www.htamil.org/23000 என்ற லிங்க்கில் பார்த்து பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x