Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு

பெங்களூரு

பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவின் தலைவராக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைக்கு மாற்றாக இது கொண்டு வரப்பட்டது. தாய்மொழி வழியில் தொடக்கக் கல்வி, உயர்கல்விகளுக்கு நுழைவுத் தேர்வு, மாணவர்களின் பள்ளிப் பாட அளவு குறைப்பு, திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறுஅம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருந்தன. இதை வரையறுக்கும் குழுவின் தலைவராக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் இருந்தார்.

இந்நிலையில், பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவின் தலைவராக கே. கஸ்தூரிரங்கனை மத்திய கல்வித் துறை அமைச்சகம் அண்மையில் நியமித்தது. இந்தக் குழுவில் தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக அமைப்பின் வேந்தர் மகேஷ் சந்திர பந்த், ஜாமியா மில்லியா பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜக்பீர் சிங் உள்ளிட்ட 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.

குழந்தை பருவக்கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் ஆசிரியர்கல்விக்கான பாடத்திட்டங்களை இந்தக் குழு உருவாக்கவுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரைகளை கருத்தில்கொண்டு இந்த புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன.

இதுகுறித்து கே. கஸ்தூரிரங்கன் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவருமே சிறந்த கல்வியாளர்கள் ஆவர். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது பெருமை அளிக்கிறது. இந்தக் குழுவின் தலைவராக இருப்பது எனக்கு கிடைத்தமிகப்பெரிய கவுரவம் ஆகும்.

என் மீது வைத்த நம்பிக்கைக்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். புதிய கல்விக்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளும், அம்சங்களும் பொருந்தும் வகையில் பாடத்திட்டங்களை வடிவமைக்க பணியாற்றி வருகிறோம். அறிவையும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் தூண்டும் விதத்தில் பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்என்பதில் மத்திய கல்வித்துறை உறுதியாக உள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில் சிறப்பானபாடத்திட்டங்கள் உருவாக்கப்படும்” என்றார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x