Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 03:10 AM

அரசுப் பள்ளி மாணவருக்கு 7.5% ஒதுக்கீடு; தரவரிசை பட்டியலில் விடுபட்டால் உதவி மையத்தில் முறையிடலாம்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை

பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் விடுபட்டிருந்தால் உதவி மையங்களில் முறையிடலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

பொறியியல் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படுவதற்கு அந்த மாணவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் ஏறத்தாழ 11 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கு 22,133 பேர்விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 15,660 பேர் மட்டுமே தகுதியுடையவர்கள் ஆவர்.

தகுதியுடையவர்கள் ஒருவேளை தரவரிசை பட்டியலில் இடம்பெறாமல் விடுபட்டிருந்தால், அவர்கள் தங்கள் கோரிக்கையை நேரில் முறையிடுவதற்காக சென்னையிலும், திருநெல்வேலியிலும் பிரத்யேக அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு தமிழகம் முழுவதும் இயங்கும் 50 உதவி மையங்களிலும் முறையிடலாம். அவர்களுக்கு உரிய தகுதி இருப்பின் கண்டிப்பாக அவர்கள் தரவரிசை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

ஒருசில மாணவர்கள் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு படித்திருப்பார்கள். இணையவழி விண்ணப்பத்தில் அதுகுறித்து குறிப்பிடாமல் விட்டிருக்கலாம். அத்தகைய மாணவர்களும் உதவி மையங்களுக்கு வந்து முறையிடலாம். அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார். பேட்டியின்போது உயர்கல்வித் துறை செயலர் டி.கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா, பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டி.புருசோத்தமன் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x