Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

பள்ளிகள் முழு அளவில் செயல்படத் தொடங்கியதும் மன அழுத்தத்தை போக்க மாணவர்கள் பெற்றோருக்கு உளவியல் ஆலோசனை: பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை

கரோனா பாதிப்பு சூழல் முடிந்து பள்ளிகள் முழு அளவில் செயல்படத் தொடங்கியதும் மன அழுத்தத்தைப் போக்க மாணவர்கள், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உடற்பயிற்சிக் கூட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உடற்பயிற்சி, உடல் பராமரிப்பில் முதல்வர் அதிக அக்கறை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் பல இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக இருக்கிறார். மாணவர்களுக்கு படிப்பு மிகவும் முக்கியம்தான். அதேநேரம் உடல்நலனும் மிகவும் முக்கியமானது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் மாணவர்கள், படிப்பில் தங்கள் கவனத்தை நன்கு செலுத்த முடியும். எனவே, அனைவரும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.

பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை ஒரு வகுப்புக்கு 20 பேர் என்ற அளவில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் சுழற்சி முறையில் மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், கல்வித் தொலைக்காட்சி மூலமாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகள் வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் விஷயத்தில் முதல்வர் மிகவும் தீவிரமாக உள்ளார். நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த சட்ட மசோதாவுக்கு பாஜக உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டு நிச்சயம் அதில் வெற்றி பெறுவோம்.

பாடங்கள் மற்றும் பெற்றோர்களால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கரோனா சூழல் முடிந்து அனைத்து வகுப்புகளும் முழு அளவில் செயல்படத் தொடங்கியதும் மாணவர்கள், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x