

பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகும் மூடப்பட்டுள்ள புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தைத் திறக்க வேண்டும் என்று கோரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும் கரோனா காரணமாகக் கடந்த 19 மாதங்களாக மூடப்பட்டுள்ள புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் திறக்கப்படவில்லை.
இதனால் பல்கலைக்கழகத்தை உடனடியாகத் திறக்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியப் பல்கலைக்கழகக் கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக இரண்டாவது நுழைவு வாயில் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பைசல் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்கப் பிரதேசத் தலைவர் ஜெயபிரகாஷ், பிரதேசச் செயலாளர் பிரவீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் இப்போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றோர் கூறுகையில், "புதுச்சேரியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆனால் முக்கியமான பல்கலைக்கழகம் இன்னும் திறக்கப்படாமல் மூடி இருக்கிறது. 19 மாதங்களாக மூடியுள்ள பல்கலைக்கழகத்தை உடனடியாகத் திறக்கக் கோரி இந்தப் போராட்டத்தை நடத்தினோம்" என்று தெரிவித்தனர்.