நாளை நீட் தேர்வு: தமிழகத்தில் 18 நகரங்களில் 1,10,971 பேர் எழுதுகின்றனர்

நாளை நீட் தேர்வு: தமிழகத்தில் 18 நகரங்களில் 1,10,971 பேர் எழுதுகின்றனர்
Updated on
1 min read

2021-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து 18 நகரங்களில் 1,10,971 பேர் தேர்வை எழுதவுள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2021-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 12-ம் தேதி கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 13 மாலை முதல் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கு மாணவர்கள் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை விண்ணப்பித்தனர். மேலும் நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் தேர்வு நாளை (செப்.12) நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவலால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோலத் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வை எழுத, 1,10,971 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 40,376 மாணவர்களும் 70,594 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் விண்ணப்பித்துள்ளார்.

அதிகபட்சமாக சென்னையில் இருந்து 17,992 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அடுத்தபடியாக சேலத்தில் இருந்து 15,067 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. கரோனா காரணமாகத் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in