Published : 09 Sep 2021 03:47 PM
Last Updated : 09 Sep 2021 03:47 PM

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு: 'ஹாட்ரிக்' சாதனை

புதுடெல்லி

2021-ம் ஆண்டுக்கான தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் 7 இடங்களை மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடிகள் பிடித்துள்ளன.

2015 முதல் ஆண்டுதோறும் தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி வருகிறது. இதில் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 5 முக்கியக் காரணிகளை வைத்து மதிப்பிடப்படுகிறது. அதாவது கற்பித்தல், கற்றல் மற்றும் அதற்கான வளங்கள் (TLR), ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (RP), பட்டப்படிப்பு (GO), வெளிப்படுதல் மற்றும் உள்ளடக்கம் (OI), கருத்து (PR) ஆகிய 5 காரணிகள் தரவரிசைப் பட்டியலைத் தீர்மானிக்கின்றன.

அந்த வகையில் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தம் என்ற பிரிவிலும் பொறியியல் பிரிவிலும் ஐஐடி சென்னை முதலிடத்தில் உள்ளது.

ஐஐடி சென்னைக்கு அடுத்த இடத்தில் ஐஐஎஸ்சி பெங்களூரு உள்ளது. 3-வது இடத்தை ஐஐடி மும்பை பிடித்துள்ளது. 4, 5 மற்றும் 6-ம் இடங்களில் முறையே ஐஐடி டெல்லி, ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐடி காரக்பூர் ஆகியவை உள்ளன.

7-வது இடத்தில் ஐஐடி ரூர்க்கி, 8-வது இடத்தில் ஐஐடி குவாஹாட்டி ஆகியவை உள்ளன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 9-வது இடத்திலும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 10-வது இடத்திலும் உள்ளன.

முதல் 10 இடங்களில் 7 இடங்களை மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடிகளே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x