Published : 31 Aug 2021 03:12 AM
Last Updated : 31 Aug 2021 03:12 AM

‘இந்து தமிழ் திசை’, கன்னியாகுமரி ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் வழங்கிய ‘கலாமை கொண்டாடுவோம்’ ஆன்லைன் கலந்துரையாடல்: நாம் கூறும் மாற்றுக் கருத்துகளையும் மனம்விட்டு கேட்கும் குணம் படைத்தவர் கலாம்- ப்ரிதிவி ஏவுகணை திட்ட இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி.ஜே.சுந்தரம் பெருமிதம்

நாம் கூறும் மாற்றுக் கருத்துகளையும் மனம்விட்டு கேட்கும் குணம் படைத்தவர் அப்துல் கலாம் என்று ‘கலாமை கொண்டாடுவோம்’ ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்வில் ப்ரிதிவி ஏவுகணை திட்ட இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி.ஜே.சுந்தரம் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 6-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’, கன்னியாகுமரி ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் ஆஃப்இன்ஜினீயரிங் இணைந்து ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும்ஆன்லைன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வை கடந்த சனிக் கிழமை நடத்தின.

இந்நிகழ்வில், ப்ரிதிவி ஏவுகணை திட்டத்தின் திட்ட இயக்குநர்லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி.ஜே.சுந்தரம், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றஇயக்குநரும், ராணுவ விஞ்ஞானியுமான டாக்டர் வி.டில்லிபாபு ஆகியோர் பங்கேற்று பேசியதாவது:

லெப்டினன்ட் ஜெனரல்(ஓய்வு) டாக்டர் வி.ஜே.சுந்தரம்: நானும் கலாமும் பிஎஸ்சி முடித்து 1957-ல்இன்ஜினீயர்களாக ஆனோம். ஆனாலும் அவரை முதன்முதலாக நான் 15 ஆண்டுகள் கழித்து திருவனந்தபுரத்தில் இஸ்ரோவில் சந்தித்தேன். இருவரும் எங்களின் பணிகள் பற்றி பேசுவோம். ராக்கெட் கிளப் சென்று பேட்மிண்டன் விளையாடுவோம். இப்படியாகத்தான் எங்களுக்குள்ளான நட்புதொடர்ந்தது. ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை புரிய வேண்டுமென்கிற எண்ணமும் சிந்தனையோட்டமும் எனக்கும் கலாமுக்கும் ஒருமித்து இருந்தது. ப்ரிதிவி ஏவுகணை திட்டத்துக்குஎன்னை இயக்குநராகப் பொறுப்பேற்குமாறு கலாம் என்னிடம் கூறினார். இதன் செயலாக்கத்துக்கு நான்கரை ஆண்டுகள் ஆகுமென்று சொன்னேன். மற்ற இயக்குநர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், கலாம் ஒப்புக்கொண்டார்.

கலாமிடம் நாம் மாற்றுக்கருத்துகளை முன்வைத்து பேசினாலும், நம் கருத்தை மனம்விட்டு கேட்பார். அவரோடு கலந்தாலோசித்து செயல்படும்போது பல ஆலோசனைகளை நமக்கு வழங்குவார். ஏவுகணையை நாம் செய்வது முக்கியமல்ல; அது நமது ராணுவ பயன்பாட்டுக்குச் செல்ல வேண்டுமென்று கலாம் விரும்பினார். இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட ப்ரிதிவி திட்டத்தின் வெற்றிகரமான செயல்பாட்டினால் இந்தியாவால் முடியும், இந்தியர்களால் முடியும் என்று நிரூபிக்க முடிந்தது.

ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: அப்துல் கலாமோடு தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப் பெரிய பங்காற்றிய தொழில்நுட்ப ஆளுமையாளர் வி.ஜே.சுந்தரம். இவரைப் பற்றிய பல குறிப்புகளை கலாம் தனது ‘அக்னிச் சிறகுகள்’ நூலில் எழுதியிருக்கிறார். இவர் ராணுவ அதிகாரியாகப் பணியில் சேர்ந்து, பாகிஸ்தான் எல்லையிலும் சீனா எல்லையிலும் பணிபுரிந்து, இந்திய அறிவியல் பல்கலை.யில் முனைவர் பட்டம் பெற்றவர். ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ நிறுவனத்தின் ஏவுகணை ஆராய்ச்சி நிலையமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தின் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், ஏவுகணை தொழில் நுட்பத்திட்டங்களில் பங்கேற்று, நம் தேசத்தின் பாதுகாப்பு செயல்பாடுகளில் சிறப்பாக பங்காற்றியுள்ளார்.

கலாம் என்கிற மகத்தான ஆளுமையை, சமுதாய நலம் சார்ந்தஅவரது சிந்தனைகளை அறிந்துகொள்வதன் மூலமாக, வலிமையான தேசத்தை உருவாக்கும் செயல்பாட்டில் நாமும் பங்களிக்க வேண்டுமென்கிற உந்துதலை நாம் பெறலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நிகழ்வில், கன்னியாகுமரி ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் ஆஃப்இன்ஜினீயரிங் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.கே.மதுமதி வரவேற்புரையாற்றினார். நிறைவில், லெப்டினன்ட் ஜெனரல் வி.ஜே.சுந்தரத்தின் துணைவியார் நளினிசுந்தரம் பங்கேற்று, கலாமை சந்தித்துப் பேசியதனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிகளை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்வை காணத் தவறியவர்கள் https://www.youtube.com/user/tamithehindu/videos என்ற லிங்க்கில் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x