கரோனா: பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க புதுவை எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

கரோனா: பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க புதுவை எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.

புதுவையில் வரும் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அப்போது சுயேச்சை எம்எல்ஏ பி.ஆர்.சிவா குறுக்கிட்டு, ''பள்ளிகள் திறப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளிக்க முடியாது. நம்மிடம் அதற்குப் போதிய வசதிகள் இல்லை. எனவே பள்ளிகள் திறப்பை ஒரு மாதம் தள்ளிப்போட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், "புதுவையில் என்ன வசதிகள் இல்லை? அனைத்து வசதிகளும் புதுவையில் கிடைக்கின்றன" என்று தெரிவித்தார்.

அதற்கு பி.ஆர்.சிவா, "கரோனாவால் பாதிக்கப்பட்டு பெரியவர்கள் பலரும் தமிழகம் சென்று சிகிச்சை பெற்றனர். குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதே கருத்தை திமுக எம்எல்ஏ நாஜிம் குறிப்பிட்டுப் பேசுகையில், "பள்ளிகள் திறப்பு குறித்துத் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். அதில் எடுக்கும் முடிவை புதுச்சேரியிலும் பின்பற்ற வேண்டும்" என வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in