

பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலை இப்போது மாறி இருக்கிறது. அதற்கு நீட் தேர்வு வழிவகுத்திருக்கிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
ஏழை- எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருபுவனை எம்எல்ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச நீட் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார்.
அதையடுத்து அவர் பேசுகையில், "ஒரு நல்ல முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது. கிருஷ்ண பகவான் அவதரித்த நாளில் மக்களைக் காப்பாற்றுவதற்காக அரக்கர்களை அழித்ததைப் போல, தடுப்பூசி மூலம் கரோனா என்ற அரக்கனை அழிக்க மருத்துவராகப் போகும் மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும். நான் அடிப்படையில் ஒரு மருத்துவராக இருப்பதனால் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.
ஏழை மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் நிச்சயம் மருத்துவர் ஆகலாம். நீட் என்பது நல்ல தேர்வு. பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலை இப்போது மாறி இருக்கிறது. அதற்கு நீட் தேர்வு வழிவகுத்திருக்கிறது. நீட் குறித்து எதிர்மறைக் கருத்து சொல்வார்கள். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
நீட் தேர்வின் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு அதிகமான வாய்ப்பு கிடைக்கிறது. மருத்துவர் படிப்புக்கான பயிற்சி மட்டுமல்லாமல் ஐஏஎஸ், ஐபிஎஸ், புதுச்சேரி அரசின் போட்டித் தேர்வுகள் ஆகியவற்றுக்கும் எம்எல்ஏ அலுவலகத்தில் பயிற்சியும், நூலகம் அமைக்க உள்ளதும் நல்ல விஷயம்" என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
நிகழ்வில் திருபுவனை சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.