Last Updated : 30 Aug, 2021 03:13 AM

 

Published : 30 Aug 2021 03:13 AM
Last Updated : 30 Aug 2021 03:13 AM

தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் 15 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்: உயர்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை

தொழிற்கல்வி படிப்புகளில் அமல்படுத்தப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் சுமார் 15 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர் என்று உயர்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதையடுத்து, மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதனால் சுமார் 400 மாணவர்கள் வரை பயனடைந்தனர்.

தனி இடஒதுக்கீடு

இதேபோல பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அளவை ஆய்வுசெய்து பரிந்துரை வழங்குவற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் குழுவை தமிழக அரசு கடந்த ஜூன் 15-ம் தேதி அமைத்தது.

இந்தக் குழு சமர்பித்த அறிக்கையில், தொழில்நுட்பப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதத்துக்கு குறையாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை மற்றும் மீன்வளம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, கடந்த 26-ம் தேதி தமிழகசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினர்மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2 முதல் 4 சதவீதம் வரையே இருந்தது. இதை சரிசெய்யவே சிறப்பு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு அரசு ஒதுக்கீட்டில் 1.9 லட்சம் இடங்கள் வரை இறுதியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் சுமார் 14,250 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

1,253 இடங்கள்

குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக வளாக மற்றும் உறுப்புக் கல்லூரிகளில்மொத்தமுள்ள 8,840 இடங்களில் 663 இடங்களும் அரசுமற்றும் உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 7,860 இடங்களில் 590 இடங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு அண்ணாபல்கலை.யில் 0.83 சதவீதமும், அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் 7.4 சதவீதமும் சேர்க்கை இருந்தது கவனிக்கத்தக்கது.

இதேபோல, கால்நடை மருத்துவப் படிப்புகளில் மொத்தமுள்ள 580 இடங்களில் 44 இடங்களும் வேளாண் இளநிலை படிப்புகளில் உள்ள 4 ஆயிரம் இடங்களில் 300 இடங்கள் வரையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும்.

இதுதவிர இளநிலை மீன்வள பட்டப் படிப்புகளில் மொத்தமுள்ள 140-ல் 10 இடங்கள் ஒதுக்கப்படும். மேலும், சட்டப் படிப்புகளுக்கு அரசுஒதுக்கீட்டில் 1,651 இடங்கள் உள்ளன. அதில் 7.5 சதவீத ஒதுக்கீடு மூலம் 124 இடங்கள் வரை மாணவர்களுக்கு கிடைக்கும். அதன்படி, நடப்பாண்டு தொழிற்கல்வி படிப்புகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 15 ஆயிரம் இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பயன்பெறுவர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாய்ப்பு வழங்க வேண்டும்

இதனிடையே, அரசு உதவிபள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இடஓதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரேமண்ட் கூறும்போது, ‘‘மருத்துவக் கல்வியை தொடர்ந்து தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பெரும்பாலான உதவிபெறும் பள்ளிகள் கிராமப்புறங்களில் குறைந்த கட்டணத்தில்தான் இயங்கி வருகின்றன. இந்த மாணவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. எனவே, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் இடஒதுக்கீட்டில் சேர்க்க முதல்வர் முன்வர வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x