Published : 27 Aug 2021 03:11 AM
Last Updated : 27 Aug 2021 03:11 AM

அடுத்த கல்வி ஆண்டில் தமிழ் வழியில் பொறியியல் பட்டயப் படிப்புகள்; தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை

திருச்சுழி, திருக்கோவிலூர், தாராபுரம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். தமிழ் வழியில் பொறியியல் பட்டயப் படிப்புகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதற்கு பதில் அளித்து பேசியபோது, அமைச்சர் க.பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள்:

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக் குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தருமபுரி மாவட்டம் ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வேலூர் மாவட்டம் சேர்க் காடு ஆகிய 9 இடங்களில் புதிய இருபாலர் அரசு கலை, அறிவியல் கல்லூரி களும், திருவாரூர் மாவட் டம் கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியும் தொடங்கப் படும்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 17 மின்னணு நூலகங்கள் ரூ.85 லட்சத்தில் மேம் படுத்தப்படும். சென்னை வியாசர்பாடி, தருமபுரி, பரமக் குடி, அரியலூர், முசிறி, விழுப்புரம், சிவகங்கை, கும்பகோணம், திண்டுக்கல், திருநெல்வேலியில் உள்ள 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ரூ.1 கோடியில் மின்னணு நூலகங்கள் அமைக்கப்படும்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட 13 அரசுக் கல்லூரிகளில் முதல்கட்டமாக சங்கரன்கோவில், ஜம்புகுளம், வானூர், ஆலங்குளத்தில் உள்ள 4 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு தலா ரூ.11.33 கோடி வீதம் மொத்தம் ரூ.45.32 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், கோவில்பட்டி, சென்னை நந்தனம், திருப்பூரில் உள்ள 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய ஆராய்ச்சி பாடப் பிரிவுகள் தொடங்கப்படும். வெவ்வேறு பாடப் பிரிவுகளில் 100 பாடப் புத்தகங்கள் ரூ.2 கோடியில் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பட்டயப் படிப்பில் (டிப்ளமா) பயிற்று மொழியாக ஆங்கிலம் மட்டுமே உள்ளது. முதல்கட்டமாக, அடுத்த கல்வி ஆண்டில் சிவில் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டயப் படிப்புகள் தமிழ் வழியில் தொடங்கப்படும். படிப்படியாக இதர பட்டயப் படிப்புகளும் தமிழ்வழியில் தொடங்கப்படும்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மகளிருக்கான இன்டீரியர் டெக்கரேஷன், ஆபீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் கம்ப் யூட்டர் அப்ளிகேஷன், வெப் டிசைனிங், பயோ மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற பட்டயப் படிப்புகள், குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் தொடங்கப் படும். அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஜெர்மன், ஜப்பானீஸ், சீன, ரஷ்ய, பிரெஞ்ச் ஆகிய வெளிநாட்டு மொழிகள் கற்பிக் கப்படும்.

ஈரோட்டில் உள்ள சாலை, போக்குவரத்து பொறியியல் கல்லூரி, இந்த கல்வி ஆண்டு முதல் அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டு, மாணவர் சேர்க்கையில் 35 சதவீத இடங்கள் மாநில போக்குவரத்துக் கழக பணியாளர்களின் பிள்ளைகளுக்கு தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்படும். பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, மேற்படிப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பாலிடெக்னிக் கல்லூரி களில் மாணவர்கள் தொழில் முனைவோர் ஆவதற்கு ஊக்குவிக்கவும், உரிய பயிற்சி பெறவும் தொழில் முனைவு மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் உதவியுடன் 5 மண்டலங்களில் பயிற்சி மையம் நிறுவப்படும். மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த கூடுதல் பாடங்கள் (Add-on Courses) பயிற்றுவிக்கப்படும்.

பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்பான வணிகவியல் பயிற்சி பட்டயப் படிப்பு, வணிகவியல் பயிற்சி மற்றும் கணினிப் பயன்பாடுகள் பட்டயப் படிப்பு படித்த மாணவர்கள் தமிழகத்தின் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் நேரடியாக 2-ம் ஆண்டில் பி.காம். படிப்பில் (Lateral Entry to B.Com Courses) சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்படும்.

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.3.30 கோடியில் தொழில்சார் திறன் பயிற்சி அளிக்கப்படும். சேலம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத் துக்கான புதிய மண்டல மையங்கள் ரூ.1 கோடியில் அமைக்கப்படும். 32 மாவட்ட மைய நூலகங்களுக்கு ரூ.1 கோடியில் தலா 750 பாடநூல்கள் வழங்கப்படும்.

பொறியியல் கல்லூரிகளில் உதவித் தொகை பெறும் முதுநிலை பட்டப் படிப்பு மாணவர்களின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்த்தப்படும். கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தவும், தொழில் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யவும், வேலைவாய்ப்புகளை அதி கரிக்கவும் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களின் பாடத் திட்டங்கள் திருத்தி அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x