புதுச்சேரியை 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக்க அரசு உறுதி: கல்விக்கு ரூ.1,039 கோடி ஒதுக்கீடு

புதுச்சேரியை 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக்க அரசு உறுதி: கல்விக்கு ரூ.1,039 கோடி ஒதுக்கீடு
Updated on
1 min read

புதுச்சேரியை நூறு சதவீதக் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக்க அரசு உறுதி எடுத்துள்ளது. பள்ளிக் கல்வி, உயர் கல்விக்கு ரூ.1,039.43 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட்டில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி தொடர்பாக முதல்வர் ரங்கசாமி ஆற்றிய உரை:

"பள்ளிகளை மிக விரைவில் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தக் கல்வியாண்டில் ஐந்து பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரிப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். நடப்பாண்டில் ரூ.2.4 கோடியில் 100 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவப்படும். பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தற்காப்புப் பயிற்சி தர ரூ.51.57 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்குக் கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைச் சமன் செய்யக் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட பயிற்சி ஏடு தரப்படும். தகவல் மற்றும் மின்னணுத் தொழில்நுட்பங்களில் பள்ளிகளை மேம்படுத்த ரூ.1.10 கோடி செலவிட உத்தேசித்துள்ளோம். நடப்பு நிதியாண்டில் பள்ளிக் கல்விக்கு ரூ.742.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காமராஜர் மாணவர் கல்வி நிதி உதவித் திட்டத்தின் கீழ் உயர் கல்வி பயில்வோருக்குத் தரப்படும் நிதி உதவி தொடர்ந்து தரப்படும். இதற்காக அரசு ரூ.40 கோடி ஒதுக்கியுள்ளது. இதனால் 9,214 பேர் பயன் பெறுவர்.

தேசியத் திட்டமிடுகை மற்றும் கட்டிடக் கலைப்பள்ளியைப் (National school of planning and Architecture) புதுச்சேரியில் நிறுவ விரிவான திட்ட அறிக்கை மத்தியக் கல்வி அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கத் தொழில்நோக்கு நிலை அமைப்பு (Career Orientation Cell) உருவாக்கப்படும். நடப்பு நிதியாண்டில் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்காக ரூ.296.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியை நூறு சதவீதக் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக்க அரசு உறுதி பூண்டுள்ளது."

இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

பள்ளிக் கல்வி, உயர் கல்வித்துறைக்கு என மொத்தமாக 1,039.43 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in