Published : 24 Aug 2021 03:13 AM
Last Updated : 24 Aug 2021 03:13 AM

‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய ‘ஆளப் பிறந்தோம்’ ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி- தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்: தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உறுதி

சென்னை

தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் என்று தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எம்.சண்முகசுந்தரம், ஐபிஎஸ் அதிகாரி டாக்டர் எம்.சரவண விவேக் ஆகியோர் உறுதிபடக் கூறினர்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சங்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ‘ஆளப்பிறந்தோம்’ என்ற ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சியை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இதில் ஐஏஎஸ் அதிகாரி, ஐபிஎஸ் அதிகாரி, சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சியாளர் ஆகியோர் கலந்துகொண்டு சிவில்சர்வீஸ் தேர்வுமுறை, அதற்கானதயாரிப்பு குறித்து மாணவ, மாணவிகள் இடையே ஆன் லைனில் உரையாற்றினர்.

கருத்தாளர்களின் உரை விவரம் வருமாறு:

சென்னை தாம்பரம் ‘மெப்ஸ்’ சிறப்பு பொருளாதார மண்டல வளர்ச்சி ஆணையர் எம்.சண்முகசுந்தரம், ஐஏஎஸ்: சிவில் சர்வீஸ் தேர்வின் உள்கட்டமைப்பை மாணவர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். முதல்நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு, ஆளுமைத்தேர்வு என 3 கட்டங்களை இத்தேர்வு உள்ளடக்தியது. ஒரு தேர்வில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் முதல் தேர்வில் இருந்துதான் வரவேண்டும். முதல்கட்டமான முதல்நிலைத்தேர்வு ஒரு வடிகட்டும் தேர்வுதான். இதில் எடுக்கும் மதிப்பெண் இறுதி ரேங்க் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

ஆனால், முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்றால்தான் அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்குச் செல்ல முடியும். சிவில் சர்வீசஸ் முதல்நிலைத்தேர்வு இந்திய வனப்பணிக்கும் (ஐஎஃப்எஸ்) சேர்த்தே நடத்தப்படுவதால் தேர்வில் விவசாயம், வனம், சுற்றுச்சூழல் தொடர்பான கேள்விகள் அதிகம் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.

முதன்மைத்தேர்வில் மொத்தம் 9 தாள்கள் இருக்கும். மொழித்தாள், ஆங்கிலம், கட்டுரை, பொதுஅறிவு (4 தாள்கள்), விருப்பப் பாடம் (2 தாள்கள்). மொழித்தாள் மற்றும் ஆங்கிலம் தாள்கள் 10-ம் வகுப்பு தரத்தில் இருக்கும். இதில் எடுக்கும் மதிப்பெண் ரேங்க் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்படாது. இருப்பினும் இந்த 2 தாள்களிலும் தேர்ச்சிபெற்றால் மட்டுமே எஞ்சிய கட்டுரைமற்றும் பொது அறிவு, விருப்பப்பாடத் தாள்களின் விடைகள் மதிப்பீடு செய்யப்படும். 3-வது கட்டதேர்வு ஆளுமைத்தேர்வு. இதுஉரையாடல் போன்று அமைந்திருக்கும். முதன்மைத்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 1,750 (மொழித்தாள், ஆங்கிலம் தாள் மதிப்பெண் நீங்கலாக). ஆளுமைத்தேர்வுக்கு 275 மதிப்பெண். ஆக மொத்த மதிப்பெண் 2,025. இதில் 50 சதவீத மதிப்பெண் எடுத்துவிட்டால் வெற்றி உறுதி.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு நாளிதழ் வாசிக்கும் பழக்கும் அவசியமான ஒன்று. மேம்போக்காக படிக்காமல் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். பாடங்களைக் குறிப்பெடுத்து படிப்பது மிகவும் பய னுள்ளதாக இருக்கும்.

ஒடிசா மாநிலம் காளஹந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சரவண விவேக், ஐபிஎஸ்:நான் கடந்த 2009-ம் ஆண்டு எம்பிபிஎஸ் முடித்தேன். 4 தடவைதோல்வி அடைந்து 5-வது முயற்சியில்தான் என்னால் வெற்றிபெற முடிந்தது. எனவே, சிவில் சர்வீஸ்தேர்வில் வெற்றிபெற என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை எனது அனுபவங்கள் வாயிலாகச் சொல்ல முடியும்.

தன்னம்பிக்கை, கடின உழைப்பு இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் எளிதில் வெற்றிபெற முடியும். முதன்மைத்தேர்வுக்கு மாதிரி தேர்வு எழுதி, எழுதி நன்கு பயிற்சி பெற வேண்டும். அப்போதுதான் குறித்த நேரத்துக்குள் அனைத்து கேள்விகளுக்கும் நம்மால் விடையளிக்க முடியும். நான் 2-வது முயற்சியில் முதல்நிலைத்தேர்வில் வெற்றிபெற்று, முதன்மைத் தேர்வுக்கு சென்றபோது சரியாக எழுதிபயிற்சி பெறவில்லை. எனவே, நேரமின்மை காரணமாக அனைத்து கேள்விகளுக்கும் என்னால் விடையளிக்க முடியவில்லை. சரியாக எழுதிப் பயிற்சி பெறாதது நான் செய்த தவறு. ஒரு பாடத்துக்கு பல புத்தகங்களைப் படிக்கக்கூடாது. ஒரு புத்தகத்தை நன்கு படித்து எழுதி எழுதிப் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். ஆளுமைத்தேர்வைப் பொருத்தவரையில், தன்னம்பிக்கையோடு விடையளித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி மூத்தபயிற்சியாளர் சந்துரு: சிவில் முதல்நிலைத்தேர்வுக்கு குறைந்தபட்சம் 100 மாதிரி தேர்வுகளையாவது எழுத வேண்டும். அதேபோல், முதன்மைத்தேர்வுக்கு குறைந்தபட்சம் 50 மாதிரி தேர்வுகளையாவது எழுதிப் பயிற்சி பெற வேண்டும். முதல்நிலைத்தேர்வில் பொது அறிவு தாளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை ‘சி-சாட்’ என்ற திறனறித்தேர்வுக்கும் அளிக்க வேண்டும். முதன்மைத் தேர்வில் கேள்விகளை நன்கு புரிந்துகொண்டு விடையளிப்பது, தேவையான மற்றும் பொருத்தமான விஷயங்களை மட்டும் அளிப்பது நல்ல மதிப்பெண்ணைப் பெற்றுத்தரும். மீண்டும் மீண்டும் எழுதி எழுதிப் பயிற்சி பெறுவது முதன்மைத்தேர்வுக்குப் பெரிதும் உதவும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து, சிவில் சர்வீஸ் தேர்வு தொடர்பான மாணவ மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு கருத்தாளர்கள் விரிவாக விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியைக் காண தவற விட்டவர்கள் https://www.youtube.com/user/tamithehindu/videos என்ற லிங்க்கில் பார்த்து பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x