Last Updated : 18 Aug, 2021 03:14 AM

 

Published : 18 Aug 2021 03:14 AM
Last Updated : 18 Aug 2021 03:14 AM

கல்வி கற்க வயது ஒரு தடையில்லை - 63 வயதில் பாலிடெக்னிக்கில் சேரும் முன்னாள் ராணுவ வீரர்

தனது எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றுடன் முன்னாள் ராணுவ வீரர் பரமசிவம்.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு பாலிடெக்னில் டிஇஇஇ பிரிவில் சேர 63 வயதான முன்னாள் ராணுவ வீரர் விண்ணப்பித்துள்ளார். அவருக்கு விரைவில் சேர்க்கைக் கடிதம் தரப்படவுள்ளது.

புதுச்சேரி வீராம்பட்டிணத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். 63 வயதான இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். தற்போது புதுச்சேரி லாஸ்பேட்டை மோதிலால் அரசு பாலிடெக்கினில் டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் (டிஇஇஇ) படிப்பில் இந்தக் கல்வி ஆண்டில் சேர உள்ளார். இதற்காக தனது சான்றிதழ்களை பாலிடெக்னிக் நிர்வாக அலுவலகத்தில் நேற்று அளித்தார்.

இதுதொடர்பாக பரமசிவம் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியதாவது: எங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம். என்னுடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர். சிறு வயதில் படிக்க ஆர்வம் இருந்தது. அரியாங்குப்பம் அரசுப் பள்ளியில் கடந்த 1977-ம் ஆண்டில், 247 மதிப்பெண்கள் எடுத்து எஸ்எஸ்எல்சி தேர்ச்சிப் பெற்றேன்.

படிக்க ஆசை இருந்தாலும் குடும்பச் சூழலால் உடன் வேலைக்கு போக வேண்டியிருந்தது. ராணுவத்தில் சிப்பாய் பணிக்குச் சேர்ந்தேன். ஜம்மு காஷ்மீர், சிக்கிம், உத்தரப்பிரதேசம் என வட மாநிலங்களில் 30 ஆண்டுகள் பணியில் இருந்தேன்.

கடந்த 2008-ல் சுபேதார் மேஜர் பணியில் ஓய்வு பெற்றவுடன் புதுச்சேரி வந்தேன். பிஎஸ்என்எல்லில் காவல் பணியில் தொடங்கி ஏஎப்டி மில்லில் காவல் பணியில் உள்ளேன்.

எனக்கு 3 குழந்தைகள். முதல் பெண் தற்போது எம்டிஎஸ் படிக்கிறார். இரண்டாவது பையன் ஜிப்மரில் எம்பிபிஎஸ் படித்து விட்டு ராணுவத்தில மேஜராக சேர்ந்து நீட் அடிப்படையில் தற்போது ராணுவத்தில் பணியாற்றியப்படி எம்எஸ் படிக்கிறார். 3-வது மகள், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சுற்றுலாப் படிப்பு படித்து விட்டு, தற்போது பணியாற்றி வருகிறார்.

எனது பிறந்தநாள் ஆகஸ்ட் 15; தற்போது 63 வயதாகிறது. நான் ராணுவத்தில் ஆட்டோமொபைல் பிரிவில் பணியாற்றியபோது எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் படிப்பும் தேவையாக இருந்தது. அதனால் அத்துறையில் ஆர்வம் இருந்தது. தற்போது அரசு பாலிடெக்னிக்கில் டிஇஇஇ சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது அனுபவங்களை இளையோருக்கு தெரிவித்து இணைந்து படிக்க ஆவலுடன் இருக்கிறேன்" என்றார்.

இதுதொடர்பாக அரசு பாலிடெக்னிக் முதல்வர் பசுபதி கூறும்போது, "வித்தியாசமான விண்ணப்பம் வந்தது. முதல்முறையாக 60 வயது கடந்தவர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். அதையடுத்து பரமசிவத்தை நேர்முகத்துக்கு அழைத்தோம். அவர் கடந்த 2 ஆண்டுகளாக டிப்ளமோபடிப்பில் சேர தாமதமாக விண்ணப்பித்திருந்தது தெரிய வந்தது. தற்போது சரியான நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார்.

‘17 வயது இளையோருடன் எப்படி படிப்பீர்கள்?’ என்று கேட்டேன். ஏற்கெனவே இளம் வயது உடையவர்களுடன் ஹிந்தி, டைப்ரைட்டிங் படித்த அனுபவத்தையும், படிப்பு மீதான தனது விருப்பத்தையும் தெரிவித்தார். அவர் அளித்த ஆவணங்களின்படி முழு நேர வகுப்பில் சேர்ந்து படிக்க, அவருககு தகுதி இருந்தது.

அதனால் அவரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டோம். டிஇஇஇ பிரிவில் அவர் சேர உள்ளார். சேர்க்கைக் கடிதத்தை விரைவில் தரவுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x