

பள்ளிகள் தங்களின் மாணவர்களுக்கு ஒரு வாரத்துக்குள் மாற்றுச் சான்றிதழ் அளிப்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, பள்ளிக் கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’கரோனா தொற்று காரணமாகத் தனியார் பள்ளிகளில் கட்டணத்தைச் செலுத்த முடியாமல், பல மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். மாற்றுச் சான்றிதழ் இல்லாமலே அவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்ததை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அதன்படி நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்ததன் அடிப்படையில், வேறு பள்ளிக்கு மாறுதலாகிச் செல்ல விரும்பும் மாணவர்கள், தற்போது பயிலும் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், ஒரு வாரத்துக்குள் மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
கட்டணம் உள்ளிட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட பள்ளிகள் சட்டப்படி தீர்வு காணவேண்டும். கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது. அவ்வாறு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டால், இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கும்.
இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் இந்த விவரங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் அளிக்க வேண்டும்என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே நீதிமன்ற உத்தரவை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களின் எல்லைக்குள் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரிவிக்க வேண்டும்’’.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கோரும்போது, கல்விக் கட்டண பாக்கியைக் காரணம் காட்டி பல பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.