Published : 17 Aug 2021 03:14 AM
Last Updated : 17 Aug 2021 03:14 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’; ‘மெக்கட்ரானிக்ஸ்’ படிப்புகளில் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம்- ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

‘மெக்கட்ரானிக்ஸ்’ படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதால் இந்த துறையை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த 14-ம் தேதி நடந்த 17-வது நிகழ்வில் ‘மெக்கட்ரானிக்ஸ்’ எனும் தலைப்பில் இத்துறை வல்லுநர்கள் உரையாற்றியதாவது:

திருவள்ளூர் கேட்டர் பில்லர் இந்தியா நிறுவன நியூ புராஜெக்ட் மேனேஜர் டாக்டர் ஜி.சரவணன்: மாணவர்கள் உயர்கல்வி செல்லும்போது தங்களுக்கு பிடித்ததுறையை தேர்வுசெய்து படிக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் துறையில்சிறந்த வளர்ச்சியை பெறமுடியும். மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அம்சங்கள் ஒருங்கிணைந்ததே ‘மெக்கட்ரானிக்ஸ்’ படிப்பாகும். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதனின் வேலைகளில் இயந்திரங்கள் பங்களிப்பு அதிகம் வரத் தொடங்கிவிட்டன. வாஷிங்மெஷின், செல்போன், டிவி, கார் உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் ‘மெக்கட்ரானிக்ஸ்’ படிப்பின் வடிவமைப்பு சாராம்சங்கள் அடங்கியுள்ளன. இதுதவிர ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத் தேவை உயர்ந்து வருகிறது.

அதனுடன், பன்முகத் துறைகள் சார்ந்தபயிற்சிகள் உள்ளதால் வேலைவாய்ப்புகளிலும் ‘மெக்கட்ரானிக்ஸ்’ படித்தவர்களுக்கு முன்னுரிமை தரத் தொடங்கியுள்ளன. எனவே, மாணவர்கள் தைரியமாக இந்த படிப்பைத் தேர்வுசெய்து படிக்கலாம். அதேநேரம், கல்வி தவிர்த்து கற்றல்திறன், நேர்மறையான சிந்தனை, ஆய்வு மனப்பான்மை, சிறந்த மொழி ஆளுமை, பேச்சுத் திறன், தகவல் தொடர்பு உட்பட இதர திறன்களை மேம்படுத்தி கொண்டால் இந்த துறைகளில் மாணவர்கள் பல்வேறு சாதனைகள் புரிய முடியும்

சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி சேர்மன் பி.ராம்: ‘மெக்கட்ரானிக்ஸ்’ பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த படிப்பாகும். 60 முதல் 70 சதவீத பாடங்கள் மெக்கானிக்கல் துறையுடன் சார்ந்திருக்கும். மனிதப் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட படிப்பு என்பதால் கால வளர்ச்சிக்கேற்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். மேலும், மருத்துவம், விவசாயம் உட்பட அநேக துறைகளிலும் இதன் பங்களிப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக ‘மெக்கட்ரானிக்ஸ்’ துறை வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியுள்ளது. ‘மெக்கட்ரானிக்ஸ்’ துறை பல்வேறு உபப் பிரிவுகளை உள்ளடக்கியது. அதனால் இந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் 3-ம் ஆண்டிலேயே தங்களுக்கு ஏற்ற பிரிவுகளைத் தேர்வுசெய்து, அதில் கூடுதல் கவனம் செலுத்தி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை வடிவிலான கற்றலுக்கு முக்கியத்துவம் தருவதுடன், நமது அன்றாட வாழ்வியல் சிக்கலுக்கான தீர்வுகளைமுன்னிறுத்தி சாதனங்கள் வடிவமைப்பில் ஈடுபட வேண்டும். அதேபோல், இளநிலை டிகிரியுடன் நிறுத்திவிடாமல் முதுநிலை பட்டப்படிப்பையும் படித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

சென்னை எம்இஎல் சிஸ்டம்ஸ் அண்ட்சர்வீசஸ் நிறுவன சீஃப் ஆபரேட்டிங் அதிகாரி வி.சிவ்குமார்: நம் அன்றாட வாழ்வில் இயந்திரங்களின் பங்களிப்பு அதிகரித்துவிட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகள் மிகப்பெரும் வளர்ச்சியை பெறவுள்ளன. எனவே, நமது எதிர்கால வாழ்வியல் பெரும்பாலும் தொழில்நுட்பங்களைச் சார்ந்து இயங்கக் கூடியதாக மாறும்.

அதனால் தற்போது ‘மெக்கட்ரானிக்ஸ்’ படிப்பவர்கள் டிகிரி முடித்து வெளியேறும்போது பெரும் வரவேற்பு கிடைக்கும். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. துறை சார்ந்த அடிப்படை புரிதலுடன், தகுதிகளைத் தொடர்ந்து நீங்கள் வளர்த்துக்கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், ‘மெக்கட்ரானிக்ஸ்’ படிப்பு,வேலைவாய்ப்புகள் பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்கு துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீஈஸ்வர் காலேஜ்ஆஃப் இன்ஜினீயரிங், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி காலேஜ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகியவை இணைந்து வழங்கின. இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.youtube.com/user/tamithehindu/videos என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x