கல்லூரிப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வுத் தேதி அறிவிப்பு: விண்ணப்பப் பதிவு தொடங்கியது

கல்லூரிப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வுத் தேதி அறிவிப்பு: விண்ணப்பப் பதிவு தொடங்கியது
Updated on
1 min read

மத்தியப் பல்கலைக்கழகங்களில் கல்லூரிப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் சேருவதற்காகப் பொது நுழைவுத் தேர்வு (சியூசெட்) நடத்தப்படுகிறது.

அதன்படி, முதற்கட்டமாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உட்பட12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 2021-2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கெனவே கூறியிருந்தது. இந்நிலையில், பொது நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 15, 16, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

கணினி வழித் தேர்வு

இந்தப் பொது நுழைவுத் தேர்வானது 2 மணி நேரம் கணினி வழியில் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தவறான பதில் ஒன்றுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும்.

இந்நிலையில் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புவோர், தங்களுக்கு ஏற்ற படிப்புகளைத் தேர்வு செய்து செப்டம்பர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: cucet.nta.nic.in

மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி பாடப்பிரிவுகளில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை - 2020 வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in