

கரோனா இரண்டாவது அலைப் பரவல் குறைந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 16ஆம் தேதி) முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டாயம் கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாவது அலை காரணமாக மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே பாடம் நடத்தப்பட்டது.
தொற்று குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாகக் கடந்த 6-ம் தேதி ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16ஆம் தேதியில் இருந்து செயல்படலாம் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே இது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கடந்த 12-ம் தேதி வெளியிட்டிருந்தார். அதில், ''ஆராய்ச்சி மாணவர்களும் இறுதி ஆண்டு மாணவர்களும் 50% வருகை என்ற அடிப்படையில் கல்லூரிகளுக்கு வரலாம். ஒரே நேரத்தில் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் ஒன்றுகூடக் கூடாது.
மாணவர்கள் இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளைச் செலுத்தியிருக்க வேண்டும். கல்லூரிக்கு வரும் முன்னர் கரோனா சோதனை மேற்கொண்டிருக்க வேண்டும். கல்லூரிக்கு உள்ளேயும் வெளியேயும் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் ஆன்லைன் வழிக் கற்றலையே தொடரலாம்'' என்பன உள்ளிட்ட ஏராளமான விதிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 16ஆம் தேதி) முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தனர். சுமார் 60 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கின.
மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கெனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.