

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை புதியதாக சேர்ந்த மாணவருக்கு மாலை அணிவித்து ரூ.ஆயிரம் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் புதியதாக சேரும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் தனது சொந்தப் பணத்தில் கடந்த கல்வியாண்டு ஸ்மார்ட் செல்போன் வழங்கினார்.
இந்த ஆண்டு தலா ரூ.ஆிரம் வழங்கப்படும் என அறிவித்து, வழங்கி வருகிறார்.
வத்திராயிருப்பு பகுதியில் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து முடித்த மாணவர் சி.ஸ்ரீஹரி, படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பில் இன்று சேர்ந்தார். அவருக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார்ஞானராஜ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி க.மகேஸ்வரி ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
மேலும், மாணவரது சேர்க்கையை உறுதி செய்யப்பட்ட பின்னர், பள்ளிக் கல்வித் துறை சார்பில் இப் பள்ளியில் சேர்ந்ததற்கான ஒப்புகைச் சீட்டு மற்றும் ரூ.ஆயிரத்தையும் மாணவரின் தாய் சி.பொன்செல்வியிடம் வழங்கினர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் கூறுகையில், கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையிலும் இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புக்கேற்ற அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் பாடங்களை படித்து வருகிறார்கள். தொடர்ந்து அரசு பள்ளியைத் தேடி தனியார் பள்ளி மாணவர்கள் வந்து கொண்டுள்ளார்கள் என்றார்.