Published : 14 Aug 2021 03:17 AM
Last Updated : 14 Aug 2021 03:17 AM

கல்வி துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு: மாநில கல்விக் கொள்கை வகுக்க உயர்நிலைக் குழு

பள்ளிக்கல்வி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.32,599 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கையை வகுக்க கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால குறிக்கோள்களுக்கு ஏற்ப தமிழகத்துக்கென தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்காக கல்வியாளர்கள், வல்லுநர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழுவை அரசு நியமிக்கும். பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக்கூடிய வகையிலான பயிற்சி அளிக்க 413 ஒன்றியங்களுக்கும் தலா 40 கையடக்க கணினி (டேப்லெட்) ரூ.13 கோடி செலவில் வழங்கப்படும். 8 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்க, எழுத, கணக்கு செய்ய முடியும் என்பதை உறுதிபடுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும் இயக்கம் என்ற திட்டம் ரூ.66.70 கோடியில் செயல்படுத்தப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினித்திறன் பயிற்சி அளிக்க 1,784 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ.114 கோடி செலவில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். 865 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.20.76 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும். கரோனா காரணமாக மாணவர்களின் கற்றலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய பள்ளி நேரங்களை தவிர பள்ளி வளாகங்களுக்கு வெளியே குறைதீர் கற்றலுக்கு விரிவான திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

பள்ளிகளில் இடைநிற்றல் இல்லாமல் 100 சதவீத சேர்க்கையை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மலைப் பாங்கான, தொலைதூர பகுதிகளில் புதிதாக 12 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

சிறப்பு தேவைகள் உள்ள றகுழந்தைகள், புலம்பெயர்ந்த தொழிலாளரின் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x