Published : 11 Aug 2021 02:53 PM
Last Updated : 11 Aug 2021 02:53 PM

எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரியில் பட்டப்படிப்பு சேர்க்கை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை

அரசு எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் சேர மாணவர்கள் நாளை (ஆக.12) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சித் துறையில் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும்.

இந்நிறுவனம் தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க, 2016- 2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று, கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டு, இந்தியாவிலேயே முதன் முறையாகத் திரைப்படத் தொழில்நுட்பங்களுக்கென இளங்கலை- காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளைப் பயிற்றுவித்து வருகிறது.

தற்போது, 2021-2022ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. இளங்கலை - காட்சிக்கலை ( ஒளிப்பதிவு) - Bachelor of Visual Arts (Cinematography)

2. இளங்கலை - காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) - Bachelor of Visual Arts (Digital Intermediate)

3. இளங்கலை - காட்சிக்கலை (ஒலிப்பதிவு) - Bachelor of Visual Arts (Audiography)

4. இளங்கலை - காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) - Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)

5. இளங்கலை - காட்சிக்கலை (படத்தொகுப்பு) - Bachelor of Visual Arts (Film Editing)

6. இளங்கலை - காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் ) - Bachelor of Visual Arts (Animation and Visual Effects)

எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/ மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான விண்ணப்பங்களை 12.08.2021 முதல் 06.09.2021 வரை தபால் மூலமாகவோ அல்லது தமிழக அரசின் www.tn.gov.in எனும் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனைத்து உரிய ஆவணங்களுடன் முதல்வர் (பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் 09.09.2021 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற நேரடியாக வரவேண்டாம்''.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x