Published : 08 Aug 2021 03:17 AM
Last Updated : 08 Aug 2021 03:17 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’- சமுதாயத்தில் மதிப்புமிக்க கலை, அறிவியல், விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புகள்: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

சென்னை

சமுதாயத்தின் மதிப்புமிக்க படிப்புகளாக கலை, அறிவியல், விஷுவல்கம்யூனிகேஷன்ஸ் படிப்புகள் விளங்குவதாக ‘இந்து தமிழ் திசை’நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. கடந்த 10-ம் தேதிதொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 5 நாட்கள் நடைபெற உள்ளது.கடந்த 6-ம் தேதி நடந்த 12-வதுநிகழ்வில் ‘கலை, அறிவியல், விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்புகள்’ எனும் தலைப்பில் இத்துறை வல்லுநர்கள் உரையாற்றியதாவது:

தொழில் வழிகாட்டி நிபுணர், கல்வியாளர் ரமேஷ் பிரபா: இன்றையநவீன அறிவியல், தொழில்நுட்பத்தால் வேகமாக வளர்ச்சியடைந்த துறையாக விஷுவல் கம்யூனிகேஷன் உள்ளது. பிளஸ் 2-வில் எந்தகுரூப் எடுத்தாலும் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் சேரலாம். இதுவெறும் சினிமா சார்ந்த படிப்பல்ல. ஊடகத் துறை சார்ந்த படிப்பு எனும்புரிதலுடன் படிக்க வேண்டும். இதில், சினிமா தவிர, தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடகங்கள் என பல துறைகள் அடங்கியுள்ளன. தற்போது டிஜிட்டல் மீடியா அபார வளர்ச்சி அடைந்துள்ளது.

ஊடக விளம்பரத் துறையில் ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடிசெலவழிக்கப்படுகிறது. இத்துறையில் நாம் கவனம் செலுத்தினால் பெரிய நிறுவனங்களுக்கு விளம்பரக் கருத்துகளை எழுதித் தருவதுஅல்லது ஃப்ரீலான்ஸ் ரைட்டராக பல நிறுவனங்களுக்கு கருத்துகளை எழுதித் தருவதன் மூலம் நல்ல ஊதியம் பெறலாம். படிக்கும் கோர்ஸ் என்பது அடித்தளம் மட்டுமே. நமது சுய ஈடுபாடும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே இத்துறையில் ஜொலிக்க முடியும்.

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி உதவிப் பேராசிரியர் டாக்டர் எம்.சுஜாதா: இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப அறிவியல் பாடங்களில் நிறைய புதிய பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. தாவரவியல், உயிரியல், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் ஆகியவை முதன்மை பாடங்களாக உள்ளன. பிஎஸ்சி தாவரவியல் 3 ஆண்டுகாலப் படிப்பு. பிளஸ் 2-வில் பயாலஜி குரூப் எடுத்தவர்கள்இப்படிப்பில் சேரலாம். இதை முடித்தவர்கள் டெக்னீஷியன், ஃபார்ம்ஸ், கன்சல்டன்ட், நர்ஸரி மேனேஜிங், ஆசிரியப் பணி போன்றவற்றில்சேரலாம். இந்தப் படிப்பை முடித்துவிட்டு, உயர்கல்வி படிக்கவிரும்புவோர் எம்எஸ்சி தாவரவியல், எம்எஸ்சி பயோடெக்னாலஜி, எம்எஸ்சி மைக்ரோபயாலஜி ஆகிய படிப்புகளில் சேரலாம். அதேபோல, பிஎஸ்சி விலங்கியல் 3 ஆண்டுகாலப் படிப்பை முடித்தவர்கள், எம்எஸ்சி விலங்கியல், எம்எஸ்சி பயோடெக்னாலஜி, எம்எஸ்சி மைக்ரோபயாலஜி ஆகிய படிப்புகளில் சேரலாம்.

முன்பெல்லாம் இன்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்த கேம்பஸ் இன்டர்வியூ, இப்போது கலை, அறிவியல் கல்லூரிகளிலும் நடக்கின்றன. இறுதியாண்டில் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகும் மாணவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

நீதிபதி பஷீர் அகமது சயீது பெண்கள் கல்லூரியின் (எஸ்ஐஇடி) தமிழ்த் துறை பேராசிரியை டாக்டர் பர்வீன் சுல்தானா: பிளஸ் 2 முடித்துவிட்டு அடுத்து என்ன படிப்பது என்று தயங்கி நிற்பவர்களுக்கு வழிகாட்டும் இந்த நிகழ்ச்சி மூலமாக, சமூகத்துக்கு மிகப் பெரிய கடமையை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்து வருகிறது. 17 முதல் 25 வயதுக்குள் ஒரு மனிதன் என்ன செய்கிறானோ, அதைத்தான் தன்வாழ்நாள் முழுவதும் அவன் செய்கிறான். நாம் யார் என்பதை நமக்குஉணர்த்தும் காலகட்டம் இது.

நமக்கான துறை எது என்பதைமிகச் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெற்றோர் சொன் னார்கள் என்பதற்காக ஒரு படிப்பை தேர்வு செய்யக் கூடாது. உங்களுக்கு பிடித்த துறையை தேர்வுசெய்து படியுங்கள். அதுஎந்த துறை என்றாலும் தன்னம்பிக்கையோடு படியுங்கள்.

எதைப் படித்தாலும் ஆழமாகயோசித்து, சிந்தித்து படியுங்கள். மற்ற படிப்புகளுக்கு உள்ளதுபோல, கலை, அறிவியல் படிப்புகளுக்கும் சமூகத்தில் நல்ல மதிப்பும், புகழும், பதவியும், ஊதியமும் கிடைக்கிறது. மதிப்பெண் மட்டுமே முக்கியம் அல்ல. காலம் நமக்கு வாய்ப்புகளை மட்டுமே தரும். உத்தரவாதத்தை தராது. நாம்தான் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, நம்மை வைரக்கல்லாக உயர்த்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், கலை, அறிவியல், விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய கேள்விகளுக்கு துறை வல்லுநர்கள் விரிவாக விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங், சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி காலேஜ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகியவை இணைந்து வழங்கின.

இந்த நிகழ்வில் பங்கேற்க தவறியவர்கள் https://www.youtube.com/user/tamithehindu/videos என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம். ‘உயர்வுக்கு உயர் கல்வி’ நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/3wxsbK6 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ள வும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x