Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM

பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகால அட்டவணை விரைவில் வெளியீடு: செயலாளர் உமா மகேஸ்வரி தகவல்

சென்னை

பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன், திருத்தப்பட்ட புதியவருடாந்திர டிஎன்பிஎஸ்சி தேர்வுகால அட்டவணை விரைவில்வெளியிடப்படும் என்று அதன்செயலாளர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.

ஓராண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும். அவற்றுக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்பது பற்றிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுகால அட்டவணையை (AnnualPlanner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

34 தேர்வுகள் எப்போது?

அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுகால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு வெளியிட்டது. அதில் குரூப்-1, குருப்-2, குரூப்-4தேர்வு உட்பட 42 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றன. அவற்றில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வு, தொழில் மற்றும்வணிகத் துறை உதவி இயக்குநர் தேர்வு, தொல்லியல் அலுவலர்தேர்வு உள்ளிட்ட 7 தேர்வுகள்மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

கரோனா பெருந்தொற்று காரண மாக எஞ்சிய 34 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்று தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

கரோனா பரவல் காரணமாக,வருடாந்திர தேர்வுகால அட்டவணையின்படி தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிட இயலவில்லை. தேர்வுகள் நடத்துவது குறித்து தேர்வாணையம் ஆய்வு செய்து வருகிறது. அதன்படி திருத்தப்பட்ட புதிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

தமிழக அரசின் பொதுத்துறைநிறுவனங்களும் தங்கள் பணியாளர் தேர்வு தொடர்பாக தேர்வாணையத்தின் உதவியை நாடியுள்ளன.

தமிழக அரசு பணியைப் பொருத்தவரையில், தமிழ்வழி யில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதுதொடர்பாக தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட அரசாணையின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரைதமிழில் படித்தவர்களுக்கு தமிழ்வழி இடஒதுக்கீடு வழங்கப்படும். இந்த நடைமுறை டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தேர்வுகளில் பின்பற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x