Published : 02 Aug 2021 03:15 AM
Last Updated : 02 Aug 2021 03:15 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ திட்டமிட்டு படித்தால் சி.ஏ. தேர்வில் வெற்றி பெறலாம்: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

சென்னை

சிஏ தேர்வுக்கு முறையான திட்டமிடலுடன் படித்தால் நிச்சயம் வெற்றிபெறலாம் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அம்ரிதா விஷ்வ

வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. கடந்த 10-ம் தேதிதொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்னும் 7 நாட்கள் நடக்க உள்ளது.

கடந்த ஜூலை 31-ம் தேதி நடந்த10-வது நிகழ்வில் வணிகவியல், பட்டயக் கணக்காளர் தேர்வு படிப்புகள் எனும் தலைப்பில் இத்துறை வல்லுநர்கள் உரையாற்றினர்.

பட்டயக் கணக்காளர் டாக்டர் கோபால்கிருஷ்ண ராஜு: நம் நாட்டில் பட்டயக் கணக்காளர் (சார்ட்டட் அக்கவுன்டன்ட்) தகுதி பெற்றவர்கள் 3 லட்சம் பேர் மட்டுமேஉள்ளனர். ஆனால், மக்கள்தொகை அடிப்படையில் குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் தேவைப்படுகின்றனர். அதற்கேற்ப சிஏ தேர்வுக்கு மாணவர்களிடம் ஆர்வமும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிஏ தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். 3 விதமான படிநிலைகளைக் கொண்ட இந்த சிஏ தேர்வு ஆண்டுதோறும் மே, நவம்பர் என 2 முறை நடத்தப்படும். இதில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சிஏ அடிப்படை தேர்வு எழுத முடியும். இதில் தேர்ச்சி பெற்ற பிறகு, தொலைநிலை அல்லது இணையவழியில் பட்டப் படிப்புகளைப் படித்தவாறு அடுத்தகட்ட சிஏ இடைநிலை தேர்வுகளில் பங்கேற்க தயாராக வேண்டும். அப்போது திறன் மேம்பாடு, துறை சார்ந்த பல்வேறு குறுகியகால சான்றிதழ் படிப்புகளை இணையவழியில் படித்து தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சிஏ தேர்வு கடினமானது என்றஎண்ணம் பரவலாக மேலோங்கியுள்ளது. முறையான திட்டமிடலுடன் செயல்பட்டால் தேர்வில் வெற்றிபெறலாம். வங்கிகள், தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறுதுறைகளில் சிஏ முடித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. சிங்கப்பூர், துபாய், மலேசியா உட்பட பல்வேறு நாடுகளிலும் சிஏ முடித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

 காளீஸ்வரி கல்லூரி துணை முதல்வர் பி.கே.பாலமுருகன்: வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப பி.காம் படிப்புகளில் தற்போது பல்வேறு பாடப் பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, மாணவர்கள் தாங்கள் எந்த துறையை நோக்கி பயணிக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து, அதற்கேற்ப பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும். கரோனா சூழலால் இணைய வழியில்தான் கற்பித்தல் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, நேரடி வகுப்புகள்போல துறை வல்லுநர்களைக் கொண்டு பாடங்கள், பயிற்சிகள் தரமுடிவது இல்லை. அதனால் மாணவர்கள் தன்னிச்சையாக தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம். தினமும் நாளிதழ்களை படித்து துறைசார்ந்த நடவடிக்கைகளை கவனித்துவர வேண்டும்.

கடினமாக உழைப்பதைவிட புத்திக்கூர்மையுடன் செயல்பட்டால் எடுத்துக்கொண்ட பணிகளை சிறப்பாக முடிக்கலாம்.

வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார் ஐஆர்எஸ்: தற்போதைய தொழில்நுட்ப வசதிகளால் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மாணவர்கள் இணைய வழியிலேயே படிப்புகளைப் படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, சிஏ அல்லது ஐஆர்எஸ் தேர்வுக்கு தயாராகுபவர்கள் தங்களுக்கு அருகே சாதாரணமான கல்லூரிகளில் சேர்த்து இளநிலை பட்டப்படிப்புகளை படித்தால் போதும்.

இதுதவிர மாணவர்கள் பட்டப் படிப்புக்கு முன்னதாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவுடன் சிஏ தேர்வு எழுதுவதே சிறந்த முடிவாகும். இதனால் சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் விரயமாவது தவிர்க்கப்படும். மேலும், தேர்வு குறித்த புரிதலை விரைவில் பெறமுடியும். சிஏ முடித்துவிட்டு ஐஆர்எஸ் தேர்வுஎழுத விரும்புவதும் சிறந்த முடிவு அல்ல. எனவே, ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்பதுபோல மாணவர்கள் தங்களின் இலக்கை உயரமாக நிர்ணயித்து தொடர்ந்து விடாமுயற்சியுடன் போராடினால் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், சிஏ தேர்வுக்கு தயாராகும் வழிமுறை, எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

முழு நிகழ்வையும் காணலாம்

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங், சிவகாசி காளீஸ்வரி காலேஜ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகியவை இணைந்து வழங்கின. இந்த நிகழ்வில் பங்கேற்க தவறியவர்கள் https://www.youtube.com/user/tamithehindu/videos என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் https://bit.ly/3wxsbK6 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x