Published : 01 Aug 2021 02:21 PM
Last Updated : 01 Aug 2021 02:21 PM

கற்போம் எழுதுவோம் இயக்கத்தின்கீழ் அடிப்படை எழுத்தறிவு: 3.21 லட்சம் பேர் பயனடைந்தனர்

கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு இறுதி மதிப்பீட்டு முகாம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பங்கேற்று 3.2 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கற்போம் எழுதுவோம் திட்ட இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழகத்தில், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத 3,10,000 கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையில், கற்போம் எழுதுவோம் இயக்கம் (Padhna Likhna Abhiyan) என்கிற வயது வந்தோர் கல்வித் திட்டமானது, ரூ.7.19 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் 15,581 கற்போர் எழுத்தறிவு மையங்களை அமைத்து, அம்மையங்களில் தன்னார்வல ஆசிரியர்களின் உதவியுடன் கற்போர்களுக்கு 120 மணி நேரக் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் கற்போர்களுக்கான கல்விச் செயல்பாடுகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, இத்திட்டக் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவு இறுதி மதிப்பீட்டு முகாம், 29.07.2021 முதல் 31.07.2021 வரை மூன்று நாட்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த இறுதி மதிப்பீட்டு முகாமில் 3,21,539 கற்போர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவிலேயே, கற்போம் எழுதுவோம் இயக்கம் திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இத்திட்டத்தின் மொத்த இலக்கான 3,10,000 கற்போர் என்பதை விஞ்சி, 3,21,539 கற்போர் இத்திட்டத்தில் பங்கேற்றுப் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும், பெண் கற்போர், பட்டியலின மற்றும் பழங்குடியினக் கற்போர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், வயதில் மிகவும் முதிய கற்போர் ஆகியோருக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இக்கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் விரைவில் வழங்கப்படும்''.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x