Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’- ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்ப படிப்புகள்: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் படிப்புகளாக கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்ப படிப்புகள் உள்ளன என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. கடந்த 10-ம் தேதிதொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 8 நாட்கள் நடைபெற உள்ளது.கடந்த 30-ம் தேதி நடந்த 9-வது நிகழ்வில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்ப படிப்புகள்’ எனும் தலைப்பில் இத்துறை வல்லுநர்கள் உரையாற்றியதாவது:

சென்னை கேப்ஜெமினி துணைத்தலைவரும், குளோபல் டெலிவரி தலைவருமான சதீஷ் துரை: பிளஸ் 2 முடித்த பிறகு மாணவர்கள் தேர்வு செய்யும் படிப்பென்பது, அவர்களது வாழ்வின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் படிப்பாக இருக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் கம்ப்யூட்டரின் தேவையானது பன்மடங்கு அதிகரித்துள்ளது. வரும்நாட்களில் இதன் பயன்பாடு இன்னும் அதிகமாக உள்ளது. இதனால்வேலைவாய்ப்புகளும் மிக அதிக மாக உருவாகும்.

தகவல் தொழில்நுட்பம் இன்றைக்கு அனைத்துத் துறைகளுக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. ஆன்லைன் வணிகத்தில் பலவற்றையும் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் சைபர் செக்யூரிட்டியும், கிளவுட் தொழில்நுட்பத்தின் தேவையும் மிகவும் அவசியமாகியுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்ப படிப்புகள் இன்றைக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் படிப்புகளாக உள்ளன.

பால்ஸ் (PALS - IIT) தலைவரும், காக்னிஸண்ட் உறுப்பினருமான மோகன் நாராயணன்: இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டுள்ளது என்று சொல்லத்தக்க வகையில் இந்தத் துறை வேகமாக வளர்ந்துள்ளது. இன்றைக்கு அனைவரின் கைகளிலும் செல்போன் உள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் என பல சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகிறோம். செல்போன் மூலமாகவே நமக்கு தேவையான உணவு, புத்தகங்கள், பொருட்கள், பயணத்துக்கு கார் என அனைத்தையும் புக்கிங்செய்து வாங்குவோர், வரும் நாட்களில் பல மடங்கு அதிகரிக்கும்.

வங்கிகளின் பரிவர்த்தனையும் செல்போன் மூலமாகவே நடைபெறுகின்றன. பேட்டிஎம், ஃபோன்பே, கூகுள்பே என பணபரிவர்த்தனைகளை இருந்த இடத்திலிருந்தே செய்வது மிகுந்த வசதியாக உள்ளது. விமானத் துறை,ரயில்வே, பாரத் எலெக்ட்ரானிக்ஸ், டிஆர்டிஓ, டெலிகம்யூனிகேஷன்ஸ், ஹார்ட்டுவேர் தயாரிப்பு, ஹோம் அப்ளையன்சஸ் உள்ளிட்ட பல துறைகளில் இந்தப் படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

சென்னை ராஜலெஷ்மி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இயக்குநர்டாக்டர் ஆர்.சுந்தர்: கம்ப்யூட்டர் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் படிக்க ஆர்வமுள்ளவர்கள், அந்தத் துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்தத் துறையில் புதுப்புது கண்டுபிடிப்புகள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கின்றன. இதனால் வேலைவாய்ப்பும் கூடுதலாகிக்கொண்டே இருக்கும்.

நாம் வாய் மூலமாகத் தரும்உத்தரவுகளைக் கேட்டு, அதைப்புரிந்து வேலைசெய்யும் ஆட்டோமேஷன் கருவிகள் வந்துவிட்டன. புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க, ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். படிக்கிற காலத்திலேயே மினி புராஜெக்ட் செய்வதில் ஆர்வத்தோடு ஈடுபட வேண்டும். இதை தனியாகவோ, சிலருடன் கூட்டு சேர்ந்தோ செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

பின்னர், பொறியியல் படிப்புமற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய கேள்விகளுக்கு துறை வல்லுநர்கள் விரிவாக விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின. இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/37p8mdT என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் https://bit.ly/3wxsbK6 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x